சிபிஐ விசாரணை… தனி விமானத்தில் டெல்லி பறக்கும் விஜய்.. விடாமல் துரத்தும் கரூர் சம்பவம்!
Vijay Delhi Visit : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பிற்பகல் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவர் மறுநாள் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார் .
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தவெக தலைவர் விஜய்க்கு கடந்த ஜனவரி மாதம் சம்மன் அனுப்பப்பட்டு 2 முறை ஆஜராகி இருந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 10- ஆம் தேதி ஆஜராக கோரி விஜய்க்கு 3- ஆவது முறையாக சிபிஐ தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் நேர்காணல் நடந்ததால் 15 நாட்கள் அவகாசம் கோரியும், சிபிஐ விசாரணையை சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு மாற்றுமாறும் மனு அளித்திருந்தார். அதனை பரிசீலனை செய்த சிபிஐ அதிகாரிகள் வருகிற மார்ச் 15- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
தனி விமானத்தில் நாளை டெல்லி புறப்படும் விஜய்
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை சனிக்கிழமை ( மார்ச் 14) பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு, தனியார் ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் மார்ச் 15-ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்கு விஜய் பதில் அளித்திருந்தார்.
மேலும் படிக்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?
விஜய் பதில்-சிபிஐ விசாரணைக்கும் முரண்பாடு
அப்போது, கரூர் சம்பவ வழக்கில் விஜய் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை எனவும், சாட்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தப்படாது என்பது போல சிபிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய் அளித்திருந்த பதில்களுக்கும், சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்களுக்கும் இடையே முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது.
நீதமன்றத்தை நாடுகிறாரா தவெக தலைவர் விஜய்
இதனால், 3- ஆவது முறையாக தவெக தலைவர் விஜயை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்று வருவது கட்சி பணிகளை பாதிப்பதாகவும், இந்த விசாரணையை தேர்தல் முடியும் வரை ஒத்தி வைப்பதற்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை விஜய் தரப்பினர் நாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: கட்சி பெயரில் வந்த எம்ஜிஆர்.. தென்னந்தோப்பு சின்னம்.. புது கட்சி குறித்து விவரம் சொன்ன சசிகலா!

