வார இறுதி நாளுக்கு சொந்த ஊர் போறீங்களா… இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Special Buses: வார இறுதி நாள்களையொட்டி, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக பேருந்துகள் இக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களில் கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மற்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கி இருந்து வருகின்றனர். இவர்கள் வார இறுதி நாள்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக வார இறுதி நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல, வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சனி ஞாயிற்றுக்கிழமையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வார இறுதியில் நாட்களையொட்டி, சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், அந்த இடங்களில் இருந்து சென்னைக்கும் அதிக அளவிலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினந்தோறும் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, கும்பகோணம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ( மார்ச் 13 ) 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: ஏற்காட்டில் சுற்றுலா சீசன் தொடக்கம்… சாலை பணி காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் குவியல்!




கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதே போல, நாளை சனிக்கிழமை ( மார்ச் 14) கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு 325 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெங்களூர், வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ( மார்ச் 13) 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதே போல, நாளை சனிக்கிழமை ( மார்ச் 14 ) கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள்
மேலும், திருப்பூர், பெங்களூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், வார இறுதி நாட்கள் முடிவடைந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று புறப்படும் பேருந்துகளில் 10,774 பயணிகளும், நாளை புறப்படும் பேருந்துகளில் 4,682 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 9,663 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை: பிரபல கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் திருவிழா தொடக்கம்