ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை 6 ரூபாய் உயர்வா? – உண்மை என்ன?
Aavin Milk Price Rumour: தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் பச்சை பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஜனவரி 7 : ஆவின் (Avin) பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திமுக அரசு பால் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், மாறாக பால் விலையை உயர்த்தியுள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில், 2021 ஆம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, ஆவின் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதாகவும், அதன் பிறகு இதுவரை விலை உயர்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விலை உயர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்றும் அரசு மறுத்துள்ளது.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூ.6 உயர்வா?
சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு காரணமாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட் குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய பால் வகையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி அதிகரிக்கப்பட்டதுடன், கொழுப்புச் சத்து மற்றும் எஸ்என்எஃப் அளவுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், இதை பழைய கிரீன் மேஜிக் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை உயர்வு என தவறாக புரிந்துகொண்டு தகவல்கள் பரப்பப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
இதையும் படிக்க : ஜன.28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி?…தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்!
முக்கியமாக, பழைய கிரீன் மேஜிக் பச்சை நிற பால் பாக்கெட் மாற்றமின்றி அதே விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தற்போது அந்த பால் பாக்கெட் 500 மில்லி ரூ.22 என்ற விலையிலேயே பொதுமக்களுக்கு கிடைக்கிறது. எனவே, லிட்டருக்கு ரூ.6 விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே என்று தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் விளக்கம்
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி !@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/YPVPFN58Xi
— TN Fact Check (@tn_factcheck) January 7, 2026
மேலும், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 31 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை நகரில் மட்டும் தினசரி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் ரூ.30 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விநியோகம் எந்த தடையுமின்றி வழக்கம்போல் நடைபெற்று வருவதாக அரசு உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க : எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!
தற்போது ஆவின் நிறுவனம் சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் உள்ளிட்ட ஐந்து வகை பால் பாக்கெட்டுகளை வழக்கமான விலையிலேயே விற்பனை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் எந்த வகையிலும் விலை மாற்றம் செய்யப்படவில்லை என்றும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மொத்தத்தில், ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்ந்துவிட்டதாக பரவும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும், பால் விலை முன்பு இருந்த அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது என்றும் தமிழக அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.



