மீண்டும் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. மிரட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் கவலையில்லை – முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற கூட்டத்தில் எங்கள் எம்.பிக்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த முடிவும் எடுக்கப்பட்டால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கும். என் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. மிரட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் கவலையில்லை - முதல்வர் ஸ்டாலின்

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Apr 2026 14:48 PM

 IST

சென்னை, ஏப்ரல் 14, 2026: தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். “பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி வரும்” என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “தமிழ்நாட்டின் வாசல் வரை வந்திருக்கும் பேராபத்தைப் பற்றி சொல்லவும், ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோ. தேர்தல் பிரச்சாரத்திற்காக நின்று விடாமல் ஓடிக்கொண்டிருந்தாலும், இந்தக் கடமையைத் தவிர்க்க முடியாது.

வலுகட்டாயமாக கூட்டப்படும் நாடாளுமன்றம்:

நாளை மறுநாள் ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்களுக்கு நடுவில் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

முதல் இருந்தே இதுபற்றி நாங்கள் எச்சரித்து வந்தோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பாதிக்கப்படும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கியக் கட்சி தலைவர்களைச் சென்னையில் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்.

சொன்னதை கேட்டதற்கு தண்டனையா?

மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள், குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை நாம் பின்பற்றியதற்காக தண்டனை தரப்படுமா? தென் மாநிலங்கள் பாதிக்கப்படமாட்டாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் பதில் இல்லை.

இதற்காக பல்வேறு கட்சிகள் இணைந்து பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டோம்; அதுவும் கிடைக்கவில்லை. எந்தக் கட்சியோ, எந்த மாநிலத்தோடும் ஆலோசனை நடத்தாமல், தங்கள் விருப்பப்படி செய்கிறார்கள்.

இந்நிலையில், மரியாதைக்குரிய சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் பதில் அளிக்கப்படவில்லை. இது பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கை; மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்:

நாடாளுமன்ற கூட்டத்தில் எங்கள் எம்.பிக்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த முடிவும் எடுக்கப்பட்டால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கும். என் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்:

இது தேர்தல் காலம் என்பதால், டெல்லியில் அமைதியாக தொகுதி மறுவரையறை செய்யலாம் என்று நினைத்தால் அது நடக்காது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பழைய போராட்ட வரலாற்றை மீண்டும் இந்தியா பார்க்க வேண்டி வரும்.

இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை. தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம் நிலை. சுயமரியாதையும் மாநில உரிமைகளும் முக்கியம். அது தான் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழர் கலைஞரும் கற்றுக் கொடுத்த கொள்கை. பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில், அவர்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன் — தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, இது தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படும் இறுதி எச்சரிக்கை. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” என தெரிவித்தார்.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்