“என் மகளை மீட்டுத் தாங்க!”.. நடுரோட்டில் உருண்டு பிரண்டு கதறிய பெற்றோர்.. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!!
இச்சம்பவம் குறித்து திவ்யதர்ஷினியின் தந்தையான காளி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கக் கூறுகையில், "என் மகளை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள பெருமாளுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட அவன் மற்றொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதை நானே நேரில் பார்த்தேன் என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து, மகளின் காலைப் பிடித்து பெற்றோர்கள் கதறி அழுததும், நடுரோட்டில் உருண்டு பிரண்டு ரகளையில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி லாரி சேட் பகுதியைச் சேர்ந்த காளி – பிரவீனா தம்பதியினரின் மகள் திவ்யதர்ஷினி (19). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் பெருமாள் (23) என்பவருடன் திவ்யதர்ஷினிக்குக் காதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் காதலி விவகாரத்தில் புகைப்பட கலைஞர் கொலை.. உடலை தண்டவாளத்தில் வீசிய கொடூரம்.. இருவர் அதிரடி கைது!
சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வரும் பெருமாளும், திவ்யதர்ஷினியும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் மகளின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மலையில் திருமணம் – போலீசில் தஞ்சம்:
பெற்றோரின் எதிர்ப்புக் காரணமாக, கடந்த சனிக்கிழமை அன்று பெருமாள் மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் நேற்று அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு, தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி ஜோலார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று தம்பதியராகத் தஞ்சமடைந்தனர்.
காலைப் பிடித்து கதறிய தாய், தந்தை:
காதல் ஜோடி காவல் நிலையத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் பெண்ணின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர். காவல் நிலையம் வந்த பெற்றோர், திவ்யதர்ஷினியைத் தங்களுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், பெண் தங்களது பேச்சைக் கேட்காததால், ஆவேசமும் அதிர்ச்சியும் அடைந்த தாய் மற்றும் தந்தை இருவரும் போலீசார் முன்னிலையிலேயே மகள் திவ்யதர்ஷினியின் காலைப் பிடித்துக் கொண்டு கத்தி கதறி அழுதனர். இதனால் காவல் நிலைய வளாகத்திற்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
நடுரோட்டில் உருண்ட குடும்பத்தினர்:
சலசலப்பு அதிகமானதைத் தொடர்ந்து, போலீஸார் பெற்றோர்களைக் காவல் நிலையத்தை விட்டு வெளியே அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், காவல் நிலையம் முன்பு உள்ள பிரதான சாலையில் திடீரென அமர்ந்து, உருண்டு பிரண்டு கத்தி கதறி அழுதனர். “என் பெண்ணுடன் எங்களை ஒருமுறை பேச விடுங்கள்” என்று அவர்கள் கண்ணீர் விட்டுக் கூச்சலிட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
தந்தை பகிரங்கக் குற்றச்சாட்டு:
இச்சம்பவம் குறித்து திவ்யதர்ஷினியின் தந்தையான காளி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கக் கூறுகையில், “என் மகளை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள பெருமாளுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட அவன் மற்றொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதை நானே நேரில் பார்த்தேன். அதுமட்டுமின்றி, அந்த ஊரில் விசாரித்த போது ஒருவர் கூட பெருமாளை நல்லவன் என்று சொல்லவில்லை. இப்படிப்பட்டவனிடம் என் மகள் சிக்கிக்கொண்டாள். தயவுசெய்து எனது மகளை அவனிடமிருந்து மீட்டு என்னுடன் அனுப்பி வையுங்கள்” என்று கத்தி கதறி அழுது பேட்டி அளித்தார்.
இதையும் படிக்க: “எம்எல்ஏக்களை விலை பேசுவது வெட்கக்கேடானது!”.. குதிரை பேரம் விவகாரத்தில் செங்கோட்டையன் ஆவேசம்!
பெற்ற மகளின் எதிர்காலத்தை நினைத்து, நடுரோட்டில் பெற்றோர் உருண்டு பிரண்டு அழுது, செய்தியாளர்களிடம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒட்டுமொத்த பொதுமக்களையும் கண்கலங்கச் செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.