திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் – சூரனை வதம் செய்தார் முருகன் – வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என எழுப்பிய கோஷம்
Tiruchendur Soorasamharam Festival Celebrations : கந்த சஷ்டியின் ஒரு பகுதியாக திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை தனது தாயார் பார்வதி தேவியிடம் இருந்து பெற்ற வேலால் முருகன் வதம் செய்தார். இதனையடுத்து பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர்.
திருச்செந்தூர், நவம்பர் 15 : கந்த சஷ்டியின் ஒரு பகுதியாக திருச்செந்தூரில் (Tiruchendur) நவம்பர் 15, 2026 இன்று சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை தனது தாயார் பார்வதி தேவியிடம் இருந்து பெற்ற வேலால் முருகன் வதம் செய்தார். இதனையடுத்து அங்கு குழுமியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு எதிரொலித்தது.
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவில் சூரனை வதம் செய்தார் முருகன்
திருச்செந்தூர் கடற்கரையில் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி சுற்றிச் சுற்றி போரிட்ட யானை முகம் கொண்ட கஜமுகாசுரனை, தனது தாய் பார்வதி தேவியிடம் பெற்ற வேலால் வதம் முருகன் செய்தார். சூரனை வதம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார் . சூரனை வதம் செய்த ஜெயந்திநாதருக்கு கடற்கரை மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்வுக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், முருகனை தங்களது செல்போன்களில் போட்டிபோட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க : திண்டுக்கல்லில் நடுரோட்டில் கொட்டிய 25,000 லிட்டர் ஆசிட்.. லாரி விபத்தால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டம்.. பரபரப்பு!!



திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கடந்த நவம்பர் 10, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15, 2026 இன்று வெகு கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வில் சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். இந்த நிலையில் முருகன் தனது அன்னை பார்வதியிடம் இருந்து பெற்ற வேலுடன் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன், சிறிது நேரம் போக்கு காட்டிய பின் சூரனை, முருகப்பெருமான் வதம் செய்தார். சூரனை வதம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார் .
விண்ணை முட்டிய பக்தர்களின் வெற்றிவேல் கோஷம்
அப்போது பக்தர்கள் ‘வெற்றி வேல், வீரவேல்’ என முழக்கம் எழுப்பி சுவாமியை வணங்கினர். சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, அதன்பின் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நவம்பர் 16, 2026 நாளை இரவு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் – தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க : புது வீடோ, கடையோ கட்டுவோர் கவனத்திற்கு.. தனியார் இன்ஜினியர்கள் மூலம் திட்ட அனுமதி பெறலாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
இந்த விழாவுக்காக மொத்தம் 4,100 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் அவசரத் தேவைகளுக்காகவும், தகவல்களைப் பெறுவதற்காகவும் ஆங்காங்கே காவல்துறை உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்திற்கு வேல் கொண்டுசெல்லும் போது, பலரும் நுழைய முயலவே போலீசார் அவர்களை கட்டுப்படுத்த இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது