“சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!”.. காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ பயணம் செய்த தலைமை காவலர்.. கோவையில் ஷாக் சம்பவம்!!
Thrilling Car Chase in Coimbatore: கோவையில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்ய முயன்ற போது, காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ தூரம் பயணித்து கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்த கோவில்பாளையம் தலைமை காவலர் வேல்முருகனின் தீரச் செயல் பெரும் பரபரப்பையும் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கோவை, செப்.27: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிர்ச்சியும் விறுவிறுப்பும் நிறைந்த த்ரில்லிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 300 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்ய முயன்ற போது, கடத்தல்காரர்கள் போலிசாரைக் கண்டு காரை நிறுத்தாமல் அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது, உயிரைப் பொருட்படுத்தாமல் கணநேரத்தில் செயல்பட்ட காவல் துறை தலைமை காவலர் ஒருவர், ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துத் தொங்கியபடியே 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கடத்தல்காரர்களைச் சாதுரியமாக மடக்கிப் பிடிக்க உதவிய சம்பவம் பொதுமக்களிடையேயும் காவல் துறையினரிடையேயும் பெரும் வியப்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!
கடத்தல்காரர்களின் திடுக்கிடும் தப்பித்தல்:
கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் அப்பகுதியில் வழக்கமான தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த சொகுசு கார் ஒன்றை போலிஸார் நிறுத்திச் சோதனையிட்டனர். காரின் பின் இருக்கையில் மூட்டை மூட்டையாகப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு, உதவி ஆய்வாளர் விக்னேஷ் அதை ஆய்வு செய்ய முற்பட்டார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள், உதவி ஆய்வாளரைத் திடீரெனத் தள்ளி விட்டு விட்டு, காரின் கதவுகளைச் சாத்திக் கொண்டு வாகனத்தை அதிவேகமாகப் பறக்கவிட்டனர்.
40 கி.மீ தொங்கியபடி பயணித்த தலைமை காவலர்:
கடத்தல்காரர்கள் தப்ப முயன்றதைக் கண்டு கணநேரத்தில் துரிதமாகச் செயல்பட்ட தலைமை காவலர் வேல்முருகன், ஓடும் காரின் மேற்கூரையின் மீது பாய்ந்து குதித்து, காரைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். தலைமை காவலர் மேலேயே ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இருப்பதைப் பொருட்படுத்தாதக் கடத்தல்காரர்கள், காரை நிறுத்தாமல் விளாங்குறிச்சி, காளப்பட்டி நாலு ரோடு, சித்ரா வழியாகக் கணியூர் சுங்கச்சாவடியை நோக்கிச் சென்றனர். கணியூர் டோல்கேட்டில் அமைக்கப்பட்டிருந்த ‘அட்வான்ஸ் ஃபாஸ்ட் டேக்’ வசதியைப் பயன்படுத்தி சுங்கச்சாவடித் தடைகளை உடைத்துக் கொண்டு கார் மேலும் அதிவேகமாகப் பறந்தது. காரின் கூரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்ற தலைமை காவலர் வேல்முருகனைக் காப்பாற்றவும், கடத்தல் காரர்களைப் பிடிக்கவும் பின்னாலேயே வந்த சக வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் இக்காட்சிகளைப் பதிவு செய்தவாறே துரத்தினர்.
போலிசாரின் கூட்டு நடவடிக்கை:
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கணியூர் போலிஸ் ரோந்து வாகனம், கணியூர் ஆம்புலன்ஸ், எல்.ஜி மருத்துவமனை ஆம்புலன்ஸ், பாலா ஆர்த்தோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் ‘சினேகம்’ ஆம்புலன்ஸ் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த காரைத் தீவிரமாகத் துரத்திச் சென்றனர். உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவிநாசி போலிஸாரும் காரை எதிர்நோக்கி வந்தனர். இறுதியில், அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே சென்ற போது, ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலிஸ் வாகனங்கள் காரை நாலாபுறமும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தன.
இதையும் படிக்க: காலை உணவில் தொடர் சர்ச்சை.. சேமியா கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- பேதி.. நாமக்கல் அரசு பள்ளியில் விபரீதம்!
300 கிலோ குட்கா பறிமுதல்:
காரை நிறுத்தியதும் அதில் இருந்த இருவர் தப்பிய நிலையில், ஒருவரை போலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 3 நபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் பெங்களூரிலிருந்து சுமார் 300 கிலோ எடை உள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து கோவையில் கைமாற்ற முயன்றது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த கோவில்பாளையம் போலிஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 300 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரைப் பொருட்படுத்தாமல் காரின் கூரையில் 40 கி.மீ தூரம் தொங்கியபடி சென்று கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமை காவலர் வேல்முருகனின் இந்தத் தீரச் செயல் மற்றும் அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் நண்பர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.