விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு.. குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Vilathikulam Student Murder Case Convict To Death : விளாத்திக்குளம் பிளஸ் 2 மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10- ஆம் தேதி பிளஸ் டூ மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு வந்த ரவுடி தர்ம முனீஸ்வரன் என்பவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த சம்பவத்தில் தர்ம முனிஸ்வரனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், காவல்துறை அதிகாரிகள், மாணவியின் உடலை கூறாய்வு செய்த மருத்துவர்கள், மாணவி மற்றும் குற்றவாளியின் மாதிரிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 73 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இரட்டை மரண தண்டனை – ஒராண்டு கடுங்காவல்
மேலும், குற்றச்சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாணவி பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவருக்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும் என நீதிபதி பீரித்தா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது தர்ம முனிஸ்வரனுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். அதில், பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு மரண தண்டனையும், மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததற்காக மற்றொரு மரண தண்டனையும் என இரட்டை மரண தண்டனை மற்றும் ஒராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “கத்தியதால் கழுத்தை நெறித்தேன்.. உடலை முள்புதரில் வீசினேன்”.. கோவை சிறுமி கொலையில் குற்றவாளி பகீர் வாக்குமூலம்!




75 நாள்களுக்குள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
இந்த தண்டனையானது இரு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கூறுகையில், இந்த வழக்கின் தீர்ப்பானது பெண் குழந்தைகளை பெற்ற தந்தைகள் மற்றும் சகோதரர்கள் ஆகியோருக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவாக நின்று போராடினர். அந்த மாணவியை தங்களது சகோதரியாகவும், குடும்ப உறுப்பினர்கள் போலவும் பாவித்து ஆதரவாக நின்றனர். குற்றம் நடந்த 75 நாட்களுக்குள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளி கைது
இந்த வழக்கில் 71 சாட்சிகள் நேரடியாகவும் இரு சாட்சிகளிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பொதுவாக 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த வழக்கில் வெறும் 20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வழக்கு தீவிர படுத்தப்பட்டு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில், செல்போன் சிக்னல் மூலமாக குற்றவாளி தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்.. சிறுவன் வெட்டி படுகொலை.. 5 பேர் கும்பல் வெறிச்செயல்!