’தமிழகத்தில் பாஜகவுக்கு No Entry தான்’ திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
DMK Mupperum Vizha : கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். அதாவது, தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி என்றும் தமிழகத்தை எப்போதும் தலைகுனிய விடமாட்டேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர், செப்டம்பர் 17 : பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் செதுக்கிய தமிழ்நாடு என்றும் இங்கு அடக்குமுறைக்கு, ஆதிக்கத்துக்கு, திணிப்புக்கு நோ என்ட்ரி எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மொத்தத்தில் தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்டரி என்று அவர் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் கோடங்கிபட்டியில் முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த முப்பெரும் விழாவில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து, இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “வெற்றிப்பயணம் தமிழக மக்கள் ஆதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். இந்தியாவில் எந்த இயக்கத்திலும் திமுகவை போல கொள்கை தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். உங்களுக்கு தலைமை தொண்டனாக இருப்பது நான் பெற்ற பெரும் பேறு. ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பது காவி கொள்கை. 2000 ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என எடப்பாடி பழனிசாமி உண்மையை பேசியிருக்கிறார்.
Also Read : வாக்கு அரசியலுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை.. அரசியலில் சொகுசுக்கு இடமில்லை – முதல்வர் ஸ்டாலின்..




’தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி தான்’
ஆனால், நாம் காரணம் என நம் மீது பாஜக வன்மத்தை கொட்டி கொண்டிருக்கிறார்கள். நம்மை முடக்க நினைத்தார்கள். இப்பவும் திமுகவுக்கு நாங்கள் தான் மாற்று என சில பேர் பேசி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு வளர்ச்சியை மாற்றி பின்னால் இழுத்து செல்ல போகிறார்களா?
மாற்றம் மாற்றம் என சொன்னவர்கள் எல்லோரும் மறைந்து போனார்கள். ஆனால், திமுக மட்டும் மறையவில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னிடம் அதிகாரம் இருந்த போது எதுவும் செய்யாமல் அடிமை சாசனம் எழுதி கொடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பே இல்லாமல் என்னை ஒருமையில் பேசி கொண்டிருக்கிறார்.
ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை அடகு வைத்து விட்டார். திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என சொன்னவர் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அமித்ஷாவை பார்த்து விட்டு முகத்தை மூடிக்கொண்டு சென்றுள்ளார். காலிலேயே விழுந்த பின்னர் கர்சீப் எதுக்கு என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள்.
Also Read : அன்புக் கரங்கள் திட்டம்… மாதம் ரூ.2,000 பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
நம் மீது பல்வேறு ஆதிக்கங்களை செய்கிறது பாஜக. இந்தி திணிப்பு, நீட் தேர்வு, கல்வி நிதி, கீழடி, வாக்காளர் பட்டியல் திருத்தம் என அவர்கள் செய்யும் அடக்குமுறைக்கு no entry தான். ஆதிக்கம், திணிப்புக்கு no entry.
மொத்தத்தில் பாஜகவுக்கு no entry தான். டெல்லிக்கு கேட்பது மாதிரி சொல்லுங்கள்.
தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்தார்.