திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
CM MK Stalin Germany Visit : முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று சென்னையில் ஜெர்மணிக்கு புறப்பட்டுள்ளார். இதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என கூறினார்.

சென்னை, ஆகஸ்ட் 30 : தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin Germany Visit) 7 நாட்கள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து புறப்பட்டுள்ளார். முதற்கட்டமாக 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனிக்கு புறப்பட்டு உள்ளார். அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு பெரு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன். தமிழகத்தில் புதிதாக 32.81 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம். வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி பணிகள் தொடங்கி விட்டன. இதற்கு ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிபரங்களே சாட்சி” என்றார்.
தொடர்ந்து அவரிடம் வெளிநாடுகள் பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ”அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள எப்படி இருந்ததோ, என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களும் அப்படியே இருக்கும் என்று நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஆனால், நாங்கள் போடும் ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன. வந்துள்ளன” எனக் கூறினார்.




Also Read : ‘குழந்தைகளை பார்த்ததும் எனர்ஜி வந்துருச்சு’ காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்?
தொடர்ந்து, திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருகிறார்கள். அதுதான் உண்மை. எத்தனை கருத்துக் கணிப்பு வந்தாலும், அனைத்து கருத்துக் கணிப்புகளை மிஞ்சி அமோக வெற்றியை திமுக பெறும்” எனக் கூறினார்.
மேலும், திமுகவுக்கும், தவெகவுக்கு தான் போட்டி என விஜய் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, “நான் அதிகம் பேசமாட்டேன். பேச்சை குறைத்து செயலில் காட்டுவதுதான் எனது பாணி” என தெரிவித்தார். சமீபத்தில் பீகார் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தமிழக மக்களுக்கு உண்டு. ஏன், பீகார் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. அங்கேயும் மக்களை எழுச்சி பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவி இருக்கிறது என்பதே உண்மை” என தெரிவித்தார்.
Also Read : 10 நாட்கள் பயணம்.. லண்டன், ஜெர்மனி செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. வெளியான பயணத் திட்டம்!
முதல்வரின் வெளிநாடு பயணம்
2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜெர்மனியில் தரையிறங்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு அயலக அணியின் நிர்வாகிகளை சந்திக்கிறார். தொடர்ந்து, 2025 செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் புறப்படுகிறார். மேலும், 2025 செப்டம்பர் 2,3ஆம் தேதிகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர்களை சந்தித்து பேசுகிறார்.
2025 செப்டம்பர் 4,5ஆம் தேதிகளில் ஆக்ஸபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, மறுநாளும் பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். 2025 செப்டம்பர் 7ஆம் தேதி மாலை லண்டனில் இருந்து சென்னை கிளம்புகிறார். 2025 செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.