துணை ஜனாதிபதிக்கு சரியான தேர்வு சுதர்சன் ரெட்டி தான் – முதல்வர் ஸ்டாலின் உறுதி..
Tamil Nadu CM MK Stalin: இந்திய நாட்டின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்தியக் கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வருகை தந்து தமொழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

சென்னை, ஆகஸ்ட் 24, 2025: துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய துணை ஜனாதிபதி போட்டிக்கு பாரதிய ஜனதா கட்சி தரப்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி இராதாகிருஷ்ணனும் இந்திய கூட்டணியை சேர்ந்த சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரக்கூடிய செப்டம்பர் 9 2025ஆம் தேதி நடைபெற உள்ளது. முடிவுகளும் அன்றைய தினமே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் சி.பி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
சி.பி. ராதாகிருஷ்ணன் – சுதர்சன் ரெட்டி:
இந்திய கூட்டணி தரப்பில் சி.பி இராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ் பின்புலத்தை கொண்டவர் என்பதாலும் பாஜகவில் பல்வேறு பதவிகளில் இருந்து வருவதாலும் அவருக்கு எதிராக வேறொரு வேட்பாளரை களம் இறக்குவோம் என தெரிவித்திருந்தனர். அதன்படி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்திருந்தனர். இருவருமே வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில் அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்.. புதிய பொறுப்பு வழங்க திட்டம்.. அடுத்த டிஜிபி யார்?
அந்த வகையில் இந்தியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி தமிழகத்திலிருந்து தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக ஆகஸ்ட் 24 2025 தேதியான இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். அங்கு தியாகராய நகரில் இருக்கக்கூடிய நட்சத்திர விடுதியில் தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது முதல்வர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் எம்பிக்களும் உடன் இருந்தனர்.
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு சரியான தேர்வு சுதர்சன் ரெட்டி தான்:
Hon’ble Thiru. Sudershan Reddy, who has spent five decades defending the Constitution and human rights, is the right choice for #VicePresident.
From Osmania University to the Supreme Court, his life reflects integrity, #SocialJustice, and the core ideals of India such as… pic.twitter.com/eFM9EeeY9M
— M.K.Stalin (@mkstalin) August 24, 2025
அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ” அரசியல் அமைப்பை பாதுகாக்கும் பணிக்கு சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர் என்றால் அது சுதர்சன் ரெட்டி தான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை பேரும் சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக ஏற்றுக் கொள்வார்கள். மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்