ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்.. புதிய பொறுப்பு வழங்க திட்டம்.. அடுத்த டிஜிபி யார்?
DGP Shankar Jiwal Retirement: தமிழக டிஜிபியாக இருக்கும் சங்கர் ஜிவால், வரும் ஆகஸ்ட் 31, 2025 அன்று ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சந்தீப்ராய் ரத்தூர், சீமா அகர்வால் அல்லது வெங்கட்ராமன் தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 24, 2025: தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வரும் சங்கர் ஜிவால் வரும் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் 2023 ஆம் ஆண்டு தமிழகத்தின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டார். இந்த நிலையில் அடுத்த டிஜிபியாக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், டெல்லியில் பட்டப்படிப்பை முடித்தார்.
அதனைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தமிழகக் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் இதுவரை பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி.. அரசு எடுத்த நடவடிக்கை..
சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு:
சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், அப்போது டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தற்போது டிஜிபியாக உள்ள சங்கர் ஜீவால், ஓய்வு பெற்ற பின்பு புதிதாக உருவாக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: விஜயால் விஜயகாந்த் ஆக முடியாது.. கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே – பிரேமலதா விஜயகாந்த்
அடுத்த டி.ஜி.பி யார்?
மேலும், அடுத்த டிஜிபியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற பட்டியலில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சந்தீப்ராய் ரத்தூர், சீமா அகர்வால், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சந்தீப்ராய் ரத்தூர் தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும், சீமா அகர்வால் தீயணைப்பு துறை இயக்குநராகவும், வெங்கட்ராமன் நிர்வாகப் பிரிவு டிஜிபியாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.