விஜயால் விஜயகாந்த் ஆக முடியாது.. கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே – பிரேமலதா விஜயகாந்த்
Premalatha Vijayakanth: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயால் கேப்டன் ஆக முடியாது என பேசியுள்ளார். மேலும் தேமுதிக நிகர் தேமுதிக மட்டுமே, யாராலும் தேமுதிகவின் வாக்குகளை பறிக்க முடியாது என்றும் அதனை கட்சித் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரேலதா விஜயகாந்த், ஆகஸ்ட் 24, 2025: கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே தேமுதிகவிற்கு நிகர் தேமுதிக மட்டுமே என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் தலைவர் விஜய் மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து பேசி இருந்தார். அதாவது, “ மதுரை என்றால் நினைவுக்கு வருவது ஒரு விஷயம் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. ஆனால் அதே குணம் கொண்ட அண்ணன் விஜயகாந்த் உடன் எனக்கு பழக நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அவரை எப்படி மறக்க முடியும்” என பேசி இருந்தார். இதற்கு பதிலளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் எங்களுக்கு தம்பிதான் இது அரசியலுக்குப் பிறகு உருவான ஒரு உறவு அல்ல சினிமா காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது என தெரிவித்திருந்தார்.
நெருங்கும் தேர்தலும் தேமுதிகாவின் யூகங்களும்:
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேமுதிக கட்சி தற்போது வரை கூட்டணி குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேபோல் தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தேமுதிக முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அந்த கட்சி சந்திக்க கூடிய முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும். எனவே இந்த அரசியல் களத்தில் தேமுதிகவின் பலம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் உள்ளனர்.
விஜயும் எனக்கு ஒரு பிள்ளை தான் – பிரேமலதா விஜயகாந்த்:
அந்த வகையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தேமுதிக செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். அப்போது பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார்.
மேலும் படிக்க: சண்டே ஷாப்பிங்.. வணிவளாகத்தில் முதல்வர் ஸ்டாலின்.. இணையத்தில் வைரலாகும் காட்சிகள்..
அப்போது பேசிய அவர், “ கேப்டன் விஜயகாந்த் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இணைந்து 17 படங்கள் உருவாகியுள்ளது. விஜயை நாங்கள் சிறுவயதிலிருந்தே பார்த்தது உண்டு. உங்களுக்கு வேண்டுமானால் இப்போது விஜய் விஜய் என இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர் ஒரு பிள்ளை போல் தான்.
அவர் கேப்டனை அண்ணன் எனக்கு கூறியதால் நாங்கள் தம்பி என கூறினோம். ஆனால் அதில் வேறு ஒன்றும் இல்லை. இதற்காக தேமுதிகவின் வாக்குகள் அவர் பறிக்க பார்க்கிறார் என்பதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எங்கள் கழகத்தில் இருப்பவர்கள் யாருமே அதை பொருட்படுத்த மாட்டார்கள்.கட்சித் தலைவராகிய மக்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் உதவிகளை செய்து மக்கள் பிரச்சனைக்காக முதலில் களமிறங்குபவர் தலைவர் விஜயகாந்த்.
மேலும் படிக்க: ‘இந்தி தெரியும் போடா’ பயணிகளின் கவனத்தை பெற்ற தமிழக விமானி.. வைரல் வீடியோ!
விஜயகாந்திற்கு நிகர் விஜயகாந்த் மட்டுமே:
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே தேமுதிகவுக்கு நிகர் தேமுதிக மட்டுமே. லட்சக்கணக்கான கேப்டன்களை தலைவர் உருவாக்கிவிட்டு சென்று இருக்கிறார். எங்களுடைய வாரிசுகள் எங்களுடைய தொண்டர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் யாரும் கேப்டன் விஜயகாந்தின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதை நிச்சயம் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என பேசியுள்ளார்.