ஓசூரில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..
CM MK Stalin Hosur Trip: செப்டம்பர் 11, 2025 அன்று ஓசூரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்கு முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் ரூ.32,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஓசூர், செப்டம்பர் 09, 2025: ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 11, 2025 அன்று ஓசூர் பயணம் மேற்கொள்கிறார். சமீபத்தில், தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதன் அடுத்த கட்டமாக, செப்டம்பர் 11, 2025 அன்று ஓசூரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் ஜெர்மனி மற்றும் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த பயணத்தின் பகுதியாக சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 17,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் ரூ.32,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 41 தொழில் நிறுவனங்களோடு கையெழுத்தானது. இதன் மூலம் சுமார் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் என்றால் ஏற்கத்தக்கது அல்ல – விஜயின் பிரச்சாரம் குறித்து அண்ணாமலை கருத்து..
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு:
ஓசூரில் உள்ள தளிசாலையில் காலை 11.30 மணியளவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சூளகிரியில் சாலைவலம்:
ஓசூரில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மாலை 4.30 மணியளவில் அவர் சூளகிரி சென்றடைகிறார். அங்கு உள்ள பேருந்து நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை நடைபெறும் சாலைவலம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக அவர் சாலைவலம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு மேற்கொள்ளும் முதலாவது சாலைவலம் இதுவே ஆகும். இதற்காக திமுக தரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: பரோட்டாவால் வந்த வினை.. இளைஞர் கொடூர கொலை.. தேனியில் பயங்கரம்!
பின்னர், செப்டம்பர் 12, 2025 அன்று காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.
நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்:
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இவ்வனைத்தையும் முடித்துக்கொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் சாலை மார்க்கமாக சென்னை திரும்புகிறார்.