சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் என்றால் ஏற்கத்தக்கது அல்ல – விஜயின் பிரச்சாரம் குறித்து அண்ணாமலை கருத்து..
Annamalai On Vijay Campaign: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13, 2025 முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் வரும் டிசம்பர் 20, 2025 வரை சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, செப்டம்பர் 10, 2025: “சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்வேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல” என தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சாரப் பயணம் குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தலைவர் விஜய், வருகிற செப்டம்பர் 13, 2025 முதல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். முதல் நாள் பிரச்சாரத்தை அவர் திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.
த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்:
அவரது பிரச்சாரப் பயணத் திட்டம் சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13, 2025 அன்று தொடங்கும் இந்த பிரச்சாரம் டிசம்பர் 2025 வரை தொடரும். ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 3 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
மேலும் படிக்க: ஒரே நாளில் 3 மாவட்டங்கள்.. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை.. தலைவர் விஜய் சூறாவளி சுற்றுப்பயணம்..
இந்த சூழலில், அவரின் பிரச்சாரத்தைப் பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய வேலை. அதற்காக நீங்கள் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும்; அது முழுநேர வேலையாக இருக்க வேண்டும்.
சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்வேன் என்றால் ஏற்கத்தக்கது அல்ல:
தமிழக வெற்றி கழகம் திமுகவுக்கு மாற்றான கட்சி என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்த வேகத்தை மக்கள் களத்தில் 24 மணி நேரமும் பார்க்க விரும்புகிறார்கள். திமுக எங்களுக்கு எதிரான கட்சி என்றால், அதை களத்தில் காட்டினால்தான் மக்கள் நம்புவார்கள். ‘சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மக்களைச் சந்திப்பேன்’ என்றால், அவர்கள் அரசியலை எவ்வளவு சீரியஸாக எடுக்கிறார்கள் என்று மக்கள் பார்க்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் வேட்பாளரை மாற்றினால் நாங்கள் ஆதரவு தர தயார்.. எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் டிடிவி தினகரன்..
அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, “கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். எல்லாவற்றுக்கும் நேரம் தேவைப்படும். அவர்கள் வருத்தத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம்” எனவும் தெரிவித்தார்.