ஒரே நாளில் 3 மாவட்டங்கள்.. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை.. தலைவர் விஜய் சூறாவளி சுற்றுப்பயணம்..
TVK Leader Vijay Campaign Details: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13, 2025 முதல் டிசம்பர் 20, 2025 வரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 9, 2025: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்டச் செயலாளர் கூட்டங்கள், ஒருங்கிணைப்பாளர் கூட்டங்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 13, 2025 முதல் டிசம்பர் 2025 வரை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பரப்புரை செய்ய உள்ளார்.
திருச்சியில் முதல் கட்ட சுற்றுப்பயணம்:
முதல் கட்டமாக, செப்டம்பர் 13 அன்று திருச்சியில் விஜயின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. இதற்காக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் அவர் திருச்சி மரக்கடை, பாலக்கரை, ரவுண்டானா, தலைமை அஞ்சல் அலுவலக ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக – தலைவர் விஜய் கண்டனம்..
முன்னதாக சத்திரம் பேருந்து நிலையத்தில் உரையாற்ற அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அங்கு மக்கள் அதிகம் கூடும் என்பதால் காவல்துறை மறுத்தது. இதனால், மரக்கடை அல்லது பாலக்கரை பகுதிகளில் விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு வழங்கக்கோரி மனு:
இதற்கிடையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு அளித்துள்ளார். அதில், “கட்சித் தலைவர் விஜய் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களை சந்தித்து உரையாற்ற உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
விஜய் சுற்றுப்பயண அட்டவணை:
- செப்டம்பர் 13, 2025 (சனி): திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
- செப்டம்பர் 20, 2025 (சனி): நாகை, திருவாரூர், மயிலாடுதுறை
- செப்டம்பர் 27, 2025 (சனி): திருவள்ளூர், வடசென்னை
- அக்டோபர் 4 & 5, 2025 (சனி, ஞாயிறு): கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
- அக்டோபர் 11, 2025 (சனி): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி
- அக்டோபர் 18, 2025 (சனி): காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
- அக்டோபர் 25, 2025 (சனி): தென் சென்னை, செங்கல்பட்டு
- நவம்பர் 1, 2025 (சனி): கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
- நவம்பர் 8, 2025 (சனி): திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
- நவம்பர் 15, 2025 (சனி): தென்காசி, விருதுநகர்
- நவம்பர் 22, 2025 (சனி): கடலூர்
- நவம்பர் 29, 2025 (சனி): சிவகங்கை, ராமநாதபுரம்
- டிசம்பர் 6, 2025 (சனி): தஞ்சாவூர், புதுக்கோட்டை
- டிசம்பர் 13, 2025 (சனி): சேலம், நாமக்கல், கரூர்
- டிசம்பர் 20, 2025 (சனி): திண்டுக்கல், தேனி, மதுரை