முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
DMK District Secretaries Meet: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 9, 2025 தேதியான இன்று காலை 12 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது. இதில் ஓரணியில் தமிழ்நாடு மற்றும் முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்படும்

சென்னை, செப்டம்பர் 9, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், செப்டம்பர் 9, 2025, இன்று பிற்பகல் 12 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில், கழக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் செப்டம்பர் 9, 2025 அன்று நண்பகல் 12 மணிக்கு காணொளி காட்சி (Video Conference) வாயிலாக நடைபெறும் எனவும், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன: திமுக முப்பெரும் விழா, ஊரடியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழா:
ஒவ்வொரு ஆண்டும் திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள், தந்தை பெரியாரின் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இந்த மூன்று தினங்களையும் ஒன்றாக இணைத்து முப்பெரும் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு, முப்பெரும் விழா 75 ஆவது ஆண்டு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் விழாவை சிறப்பாக நடத்த திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தரப்பில் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்த பயணத்தின் போது 33 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் பயனாக சுமார் 17,000 பேருக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவை மக்கிய கோட்டையாக மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. கருணாஸ் கண்டனம்..
ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 8, 2025 அன்று காலை சென்னை திரும்பிய நிலையில், செப்டம்பர் 9, 2025 அன்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், இந்த கூட்டத்தில், முக்கியமாக “ஒரு அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை” குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. திமுக, மொத்த வாக்காளர்களில் 30 சதவீதரை கட்சி உறுப்பினர்களாக மாற்றும் திட்டத்தை வகுத்துள்ளது.
இதற்காக நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று கட்சியின் கொள்கைகளை எடுத்துரைத்து, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்காக தனி செயலி (App) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோயிலுக்கு செல்கிறேன் என சொன்ன செங்கோட்டையன்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு? அதிமுகவில் சலசலப்பு..
நெருங்கும் தேர்தல் – விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள்:
இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை பணிகள் எந்தளவுக்கு சென்றுள்ளன? மேலும் எவ்வாறு தீவிரப்படுத்தலாம்? எந்த தொகுதிகளில் அதிகப்படியான உறுப்பினர் சேர்க்கை உள்ளது? எந்த தொகுதிகளில் பலவீனம் உள்ளது? – ஆகியவை குறித்து கட்டம்கட்டமாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உறுப்பினர் சேர்க்கை பணிகளில், கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இறங்கி களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் வலியுறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.