கோயிலுக்கு செல்கிறேன் என சொன்ன செங்கோட்டையன்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு? அதிமுகவில் சலசலப்பு..
Sengottaiyan Meet With Amit Shah: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோயிலுக்கு செல்வதாக கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் தனது இல்லத்தில் சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி, செப்டம்பர் 9, 2025: அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெளியாகி உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு, உட்கட்சி விவகாரத்தை வெளியே சொன்னதற்காக செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி, அவரது பதவிகள் பறிக்கப்பட்டன.
இது அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் சுமார் 2000 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் படிக்க: மாறும் வானிலை.. மழை ஒரு பக்கம்.. அதிகரிக்கும் வெப்பநிலை மறுபக்கம்.. ரிப்போர்ட் இதோ..
டெல்லி சென்ற செங்கோட்டையன்:
அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் இந்த சூழலில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையன் செப்டம்பர் 8, 2025 அன்று கோபிசெட்டிபாளையத்தில் இருந்து புறப்பட்டு கோவை சென்றார். அங்கிருந்து அவர் டெல்லி புறப்பட இருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
“நான் ஹரித்வாரில் உள்ள கோவிலுக்கு செல்கிறேன். பாஜக தலைவர்களை யாரையும் சந்திக்கச் செல்லவில்லை. மனநிம்மதிக்காக கோயிலுக்கு செல்கிறேன்; கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். கட்சியின் நன்மைக்காக என் கருத்தை சொன்னேன். பல்வேறு முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடுத்துள்ளார். அவர் முடிவுக்கு கருத்து சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும். பாஜக தலைவர்களை சந்திக்க நான் ஹரித்வார் செல்லவில்லை; ராமரை சந்திக்கத்தான் செல்கிறேன்,” என குறிப்பிட்டிருந்தார்.
மெலும் படிக்க: அதிமுகவை மக்கிய கோட்டையாக மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. கருணாஸ் கண்டனம்..
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு:
ஆனால், டெல்லி சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் 8, 2025 தேதியான நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடந்ததாகவும், அதிமுகவில் நடைபெறக்கூடிய உட்கட்சி விவகாரங்கள், ஒன்றிணைப்பு குறித்து பல்வேறு விஷயங்களை உள்துறை அமைச்சர் கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “கோயிலுக்கு செல்கிறேன்” என்று கூறி உள்துறை அமைச்சரைச் சந்தித்ததாக வெளிவந்த இந்தத் தகவல், அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.