பாஜகவோடு உறவாடுவது யார்? கொள்கை என சொல்லி கொள்ளையடிப்பவர் யார்? – விஜய் பரபரப்பு அறிக்கை..
TVK Vijay Statement: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ பாஜகவோடு உறவாடுவதும் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கை, கோட்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டு கொள்ளையடிப்பவர் யார்” என தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 14, 2025: “இதயமற்ற இந்த திமுகவிற்கு கொள்கை, கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும், அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலும் குமிழ்ச்சலையும் கொட்டுவது ஒன்றும் புதிதல்ல,” என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக கட்சித் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்திக்கும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதமும் விஜயின் அறிக்கையும்:
முதல் நாளான நேற்று, அதாவது செப்டம்பர் 13, 2025 அன்று, திருச்சியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பல லட்சம் மக்கள் அவரைக் காணத் திரண்டனர். இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கூட்டணியாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதியான எக்குக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “விஜய் வெளியே வரமாட்டான், மக்களைச் சந்திக்க மாட்டான் என்று ஆள் வைத்து கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு பக்கங்களில் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக் கொள்வது போல, தங்களது முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. 5 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
புதியன புகுதலும், பழையன நீங்கலும் – பழந்தமிழ் மரபு:
‘புதிய எதிரிகள்’ என்ற பெயரைச் சொல்லாமல், அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததையும் காணமுடிகிறது. ‘புதியன புகுதலும், பழையன நீங்கலும்’ எனப் பழந்தமிழ் மரபு சொல்லும் நிலையில், இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரட்டியையும் கக்கும் வார்த்தைகள் அந்தக் கடிதத்தில் அழுது கொண்டிருக்கின்றன.
வெளியில் கொள்கை என்று பேசிக் கொண்டே, உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கை, கோட்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டு கொள்ளையடிப்பவர் யார் என்பதை தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன?
மேலும் படிக்க: ” அஜித், ரஜினி வந்தால் இதை விட கூட்டம் வரும்” – விஜயின் பிரச்சாரம் குறித்து சீமான் கருத்து..
இதயமற்ற திமுக:
பொய்யான வாக்குறுதிகளை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டு தங்களது உரிமைகளுக்காக போராட வரும் சாதாரண மக்கள்மீது அடக்குமுறையை விடுபவர் யார் என்பதை தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன?” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக மக்கள் எழுப்பும் சில கேள்விகளையும் அந்த அறிக்கையில் வெளியிட்டிருந்தார். அதோடு, “இதயமற்ற இந்த திமுகவிற்கு, கொள்கை-கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும், அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலும், குகைச் சொல்லும் கொட்டுவது ஒன்றும் புதிதல்ல தானே?” எனவும் தெரிவித்துள்ளார்.