தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை.. விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்..
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு விரைவில் தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இதுகுறித்து விரிவான பதில் மனுவை போக்குவரத்துத் துறை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆகஸ்ட் 3, 2026: தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்துத் துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
வழக்கு பின்னணி என்ன?
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவையை நடத்தி வரும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்ய அனுமதித்து, சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்ஸி சேவையை நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
மேலும் படிக்க: சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் அச்சுறுத்தல்; த.வெ.க. அரசை கண்டித்து தங்கம் தென்னரசு அறிக்கை
மேலும், அதுவரை பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி இல்லை:
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும், அதுவரை தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், விதிகளை மீறி பைக் டாக்ஸி சேவையில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க: சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் அச்சுறுத்தல்; த.வெ.க. அரசை கண்டித்து தங்கம் தென்னரசு அறிக்கை
இதையடுத்து நீதிபதிகள், உரிய அனுமதி இல்லாத நிலையில் பைக் டாக்ஸி சேவையை விளம்பரப்படுத்தக் கூடாது என்று தெரிவித்தனர். மேலும், “ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?” என்ற கேள்வியையும் எழுப்பினர்.
பைக் டாக்ஸி குறித்து விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்:
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பைக் டாக்ஸி சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், பிற மாநிலங்களுக்கும் அதனை செயல்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, மாநில அரசு முழுமையாக தடை விதிக்க முடியாது; ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு விரைவில் தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இதுகுறித்து விரிவான பதில் மனுவை போக்குவரத்துத் துறை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.