டாஸ்மாக்கில் பிரபல மதுபான பிராண்டுகளுக்கு அதிரடி தடை.. மதுப்பிரியர்களுக்கு ஷாக்!!
TASMAC liquor ban: டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் 11 வகையான மதுபான பிராண்டுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடச் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றின் விற்பனைக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடி தடை விதித்துள்ளது. என்ரிக்கா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பிராந்தி, ரம் மற்றும் ஒயின் வகைகளை மறுஉத்தரவு வரும் வரை விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 14: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நுகர்வோரின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அவ்வப்போது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட பிரபல மதுபான உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் மது வகைகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் 11 பிரபல மதுபான பிராண்டுகளைத் டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்ய உடனடியாகத் தடை விதித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: கரூர் வழக்கு.. “வேலை கொடுப்பதை எதிர்க்க நீங்கள் யார்?”.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!
செயற்கை சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு:
என்ரிக்கா என்டர்பிரைசஸ் (Enrica Enterprises Pvt Ltd) என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் பல்வேறு மதுபான மாதிரிகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில், இந்நிறுவனம் தயாரிக்கும் ரம், பிராந்தி மற்றும் ஒயின் உள்ளிட்ட 11 வகையான மதுபான பிராண்டுகளில் தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறாகச் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த 11 பிராண்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு FSSAI உத்தரவிட்டுள்ளது.
விற்பனை, விநியோகத்திற்கான கட்டுப்பாடுகள்:
இந்தத் தடையைத் தொடர்ந்து, டாஸ்மாக் டிப்போக்களிலிருந்து FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்கள், உணவகங்கள் மற்றும் இராணுவக் கடைகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது எனக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த 11 பிராண்டுகளின் கையிருப்பில் உள்ள பாட்டில்களையும் நுகர்வோருக்கு விநியோகிக்கக் கூடாது என அனைத்து டாஸ்மாக் நிர்வாக மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் VSOP, VSOP Extra gold பிராந்தி, louis vernant xo பிராந்தி, பிரீமியம் பிராந்தி மற்றும் mcdowell பிராந்தி உள்ளிட்ட 11 முக்கிய பிராண்டுகள் அடங்கும்.
இதையும் படிக்க: திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு.. 10 மாவட்ட செயலாளர்கள் மாற்றப் பட வாய்ப்பு?
எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் சுற்றறிக்கை:
உணவு பாதுகாப்புத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடை விதிக்கப்பட்ட 11 பிராண்டுகளின் விற்பனையை நிறுத்துவதுடன், என்ரிக்கா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அனைத்து விதமான பொருட்களையும் உடனடியாகப் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த 11 மதுபான பிராண்டுகளின் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.