AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் வழக்கு.. “வேலை கொடுப்பதை எதிர்க்க நீங்கள் யார்?”.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!

Karur govt jobs case: கரூரில் நடைபெற்ற நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு எனக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

கரூர் வழக்கு.. “வேலை கொடுப்பதை எதிர்க்க நீங்கள் யார்?”.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 14 Aug 2026 13:27 PM IST

டெல்லி, ஆகஸ்ட் 14: கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு.. 10 மாவட்ட செயலாளர்கள் மாற்றப் பட வாய்ப்பு?

உச்சநீதிமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள்:

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்த முடிவு ஆகும்; அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் எவ்வாறு தலையிட முடியும்?” என்று வலுவான வாதங்களை முன்வைத்தார். அதேவேளையில், எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப் பணிகளை வழங்குவதற்கு எனச் சில வரையறைகளும் சட்ட நடைமுறைகளும் உள்ளன என்றும், அதனை மீறிப் பணிகள் வழங்க முடியாது என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான் என்றும் வாதிட்டார்.

எதிர்மனுதாரர்களுக்கு நீதிபதிகள் கேள்வி:

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்ப்பதற்கு நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் முடிவை ஏன் எதிர்க்கிறீர்கள் என்றும் வினவினர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ரத்து உத்தரவுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதேநேரத்தில், இந்த மனு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வ நோட்டீஸையும் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்.. தஞ்சாவூரில் ஆவேசமாக வெடித்த இபிஎஸ்!!

அடுத்த கட்ட விசாரணை மற்றும் எதிர்பார்ப்பு:

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த இடைக்காலத் தடை உத்தரவின் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவு தற்காலிகமாகச் செயலிழந்துள்ளது. உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு எதிர்மனுதாரர்கள் தங்களது விளக்கமான பதில்களைத் தாக்கல் செய்த பிறகு, இந்த வழக்கின் இறுதி விசாரணை மீண்டும் நடைபெறவுள்ளது. அந்த விசாரணையின் முடிவிலேயே தமிழக அரசின் அரசாணை செல்லுமா அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுமா என்பது தெரியவரும். இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us