தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட் இதோ..
இன்று முதல் மே 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஓரிரு இடங்களில் 2-3 டிகிர செல்சியஸ் வரை குறையக்கூடும்.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில், மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ., உயரத்தில், வடகிழக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 23-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: நெல்லையில் கொடூரத்தின் உச்சம்.. குழந்தை கண் முன்னே தாய் வெட்டி படுகொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!
இன்று கனமழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (மே 18) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, நாளை (மே 19) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அதனைத்தொடர்ந்து, மே 20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மே 22ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 23ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
இன்று முதல் மே 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஓரிரு இடங்களில் 2-3 டிகிர செல்சியஸ் வரை குறையக்கூடும்.
மேலும் படிக்க: காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி.. காப்பாற்ற சென்றவரும் உயிரிழப்பு!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.