“மாணவர்களுக்கு டபுள் டிரீட்!”.. காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை.. பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!
TN School Education Dept Bans Special Classes: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவோ, சுற்றுலா அழைத்துச் செல்லவோ பள்ளிக்கல்வித்துறை கடும் தடை விதித்துள்ளது. விதிகளை மீறி வகுப்புகளோ சுற்றுலாவோ நடத்தப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
சென்னை, செப்.24: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில், வரவிருக்கும் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தவோ அல்லது சுற்றுலா போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லவோ பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கடும் தடை விதித்துள்ளனர். விடுமுறை என்பது மாணவர்கள் மன அழுத்தமின்றி ஓய்வெடுப்பதற்கான காலம் என்பதால், இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் கொடூரம்.. படிக்கட்டுப் பயணத்தை கண்டித்த நடத்துனர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல்!
சிறப்பு வகுப்புகளுக்கான கட்டுப்பாடு:
தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கிய காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த விடுமுறை காலத்தில் எந்தவொரு பள்ளியிலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி வகுப்புகளோ அல்லது சுற்றுலாவோ நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நேரிட்டால், அதற்கு அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்:
விடுமுறை நாட்களில் மாணவர்கள் முழுமையாகப் படிப்பை மறந்துவிடாமல் இருக்கும் வகையில், வினாத்தாள்களுக்கான விடைகளை எழுதிப் பார்க்கவும், தினமும் ஒரு பாடத்தைப் படிக்கவும் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விடுமுறையில் தொடர் பயிற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் தேவையான சிறப்புப் பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குமாறு ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!
பள்ளி திறக்கும் நாள் முன்னேற்பாடுகள்:
அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் முதல் நாளிலேயே, திருத்தப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை மாணவர்களிடம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளை முதல் பாடவேளையிலேயே மாணவர்களுக்கு விநியோகிக்கத் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால், விடுமுறை நாட்களில் மாணவர்கள் நீர்நிலைகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி மாணவர்களை விடுமுறையில் அனுப்ப வேண்டும் என்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.