பிறந்தநாள் கொண்டாடிய 15 நாட்களில் கொடூரம்.. மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலி.. சென்னையில் அச்சம்!!
Mysterious Fever Death Chennai: சென்னை திருவள்ளூர் எல்லைப் பகுதியான திருவேற்காட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை மர்மக் காய்ச்சலால் இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து திருவேற்காடு போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, செப்.24: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பருவநிலை மாற்றங்கள் காரணமாகக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், திருவேற்காடு பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பாபு – சங்கீதா தம்பதியின் ஒரு வயது மகனான பிரிதீவ், கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். பிறந்து 15 நாட்களுக்கு முன்பாகத்தான் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்திருப்பது பெற்றோரையும் அப்பகுதி மக்களையும் உலுக்கியுள்ளது.
இதையும் படிக்க: “தவெக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை!”.. சிபிஎம் சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
சிகிச்சையும் திடீர் உடல்நிலை பின்னடைவும்:
குழந்தை பிரிதீவுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் முதற்கட்டமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்றுக்கூட மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்துத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் குழந்தைக்கு உணவளிக்க தாயார் முற்பட்டபோது, குழந்தையின் மலம் கழிக்கும் பகுதியில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாகக் குழந்தையை அருகில் உள்ள பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
காவல்துறை விசாரணை, பிரேத பரிசோதனை:
குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, திருவேற்காடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் ரத்தப்போக்கு பாதிப்புகள் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடல் உடனடியாகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!
பொதுமக்கள் கோரிக்கையும், நடவடிக்கையும்:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நிலவி வரும் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொசு ஒழிப்புப் பணிகள், காய்ச்சல் முகாம்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, பருவக்கால நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.