சென்னையில் கொடூரம்.. படிக்கட்டுப் பயணத்தை கண்டித்த நடத்துனர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல்!
Chennai MTC Bus Incident: சென்னையில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததைத் தட்டிடி கேட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், நடத்துனரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரூர் சிக்னல் அருகே நடைபெற்ற இந்த தாக்குதல் தொடர்பான செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போக்குவரத்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, செப்.24: சென்னை மாநகரில் பள்ளி செல்லும் நேரங்களில் அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதைத் தடுக்கப் போக்குவரத்துத் துறையும் காவல் துறையும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், போரூர் சிக்னல் அருகே மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணித்ததைக் கண்டித்து, மேலேறி வருமாறு அறிவுறுத்திய அரசுப் பேருந்து நடத்துனர் மீது அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் முன்னிலையில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம், சென்னை மாநகரில் சட்ட ஒழுங்கு மற்றும் மாணவர்களின் சீர்கேடு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!
படிக்கட்டுப் பயணக் கண்டிப்பும் வாக்குவாதமும்:
சென்னை ஐயப்பன்தாங்கலில் இருந்து வடபழனி நோக்கிச் சென்ற தடம் எண் 26 கொண்ட அரசு மாநகரப் பேருந்து, போரூர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் அதில் ஏறியுள்ளனர். அப்போது, ஒருசில மாணவர்கள் பேருந்தின் வாசல் பகுதியில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பேருந்து தானியங்கி முறையில் வாசல் மூடும் வசதி கொண்ட பேருந்து என்பதால், படிக்கட்டில் மாணவர்கள் நின்றால் கதவுகளை மூட முடியாது என்பதாலும், அவர்களின் பாதுகாப்பு கருதியும் பேருந்தின் நடத்துனர் மாணவர்களை உள்ளே ஏறிப் பயணிக்குமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சரமாரித் தாக்குதலும் காவல்துறை விசாரணையும்:
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், பேருந்தில் இருந்த ஒருசில மாணவர்கள் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து நடத்துனரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காட்சி அங்கிருந்த பயணிகளின் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலைத் தொடர்ந்து பேருந்து உடனடியாகப் போரூர் சிக்னல் அருகே நிறுத்தப்பட்டு, அங்குப் பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார், எதனால் இந்தத் தாக்குதல் நடைபெற்றது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, மாணவர்களுக்கு முதற்கட்டமாக அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிக்க: மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு பண விநியோகம்?.. தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்!
பயணிகள் அச்சமும், கோரிக்கையும்:
சென்னையில் இதுபோன்று பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் சாகசப் பயணங்களில் ஈடுபடுவதும், அதனைத் தட்டி கேட்கும் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருவது போக்குவரத்துத் தொழிலாளர்கள் இடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நடத்துனர்களுக்குப் பணியிடங்களில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டப்பூர்வமான இறுக்கமான நடவடிக்கைகளுடன் கூடிய எச்சரிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துச் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.