AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!

Election Expenditure Report: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் செலவின அறிக்கையை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன. திமுக ரூ.197 கோடி, அதிமுக ரூ.118 கோடி செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் கணக்குகளும் வெளியாகியுள்ளன. கட்சிகளின் விரிவான வரவு செலவு அறிக்கை உள்ளே!

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!
இபிஎஸ், மு.க.ஸ்டாலின், சீமான்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Sep 2026 07:24 AM IST

சென்னை, செப்.25: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் தாங்கள் மேற்கொண்ட நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விரிவான கணக்கு வழக்குகளை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்து வருகின்றன. ஜனநாயக நடைமுறைகளின்படி, தேர்தல் நேரத்தில் பெறப்பட்ட நன்கொடைகள், பிரச்சாரச் செலவுகள், விளம்பரக் கட்டணங்கள் மற்றும் கட்சிகளின் தற்போதைய வங்கி இருப்புகள் குறித்த துல்லியமான தரவுகளைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தங்களின் நிதி அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளன.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. “திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை!”.. மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்!!

திமுகவின் வரவு, செலவு, கையிருப்பு விவரங்கள்:

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு வழக்குகளில், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர். பாலு ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த அறிக்கையின்படி, தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக திமுகவிடம் ரூ.365 கோடி கையிருப்பாக இருந்தது. தேர்தல் காலத்தில் நன்கொடைகள் மூலமாக ரூ.126 கோடி வசூலிக்கப்பட்டது. மொத்தமாகத் தேர்தல் செலவினங்களுக்காக திமுக ரூ.197 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே ரூ.149.89 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், பத்திரிகை மற்றும் சமூக வலைதள விளம்பரங்களுக்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆகியோரின் ஹெலிகாப்டர் மற்றும் விமானப் பயணங்களுக்காக ரூ.5.90 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் போக, தற்போது திமுகவின் வங்கிச் கணக்கில் ரூ.319.39 கோடி இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் வரவு செலவும், வங்கி இருப்பும்:

அதிமுக சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அக்கட்சித் தேர்தலில் மொத்தம் ரூ.118 முதல் ரூ.122 கோடி வரை செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் அதிமுக நன்கொடையாக ரூ.87.41 கோடி தொகையை வசூலித்துள்ளது. அக்கட்சி மேற்கொண்ட மொத்த செலவில், ரூ.103 கோடி அளவிலான தொகை தேர்தல் உத்திகளை வகுக்கும் கன்சல்டிங் நிறுவனத்திற்கும் சமூக வலைதள ஊடக விளம்பரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதிமுகவின் வங்கி கணக்கில் ரூ.295 கோடி நிதி இருப்பாக உள்ளது.

நாதகவின் எளிமையான செலவினக் கணக்கு:

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் செலவின விவரங்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் கையிருப்பில் ரூ.19 லட்சம் மட்டுமே இருந்தது. தேர்தல் காலத்தில் அக்கட்சி ரூ.2.20 கோடி நன்கொடையாக வசூலித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட மொத்தச் செலவு ரூ.1.37 கோடியாகும். இதில் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களுக்காக ரூ.93 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கரூர் சம்பவ வழக்கில் தீர்ப்பு வந்தால் “தவெக க்ளோஸ்”.. பிரசாரத்தில் இறங்கி அடித்த எடப்பாடி கே. பழனிசாமி!

தேசிய, மாநிலக் கட்சிகளின் ஒப்பீடு:

தமிழகக் கட்சிகள் மட்டுமன்றி, பிற மாநிலங்கள் மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் செலவின விவரங்களும் வெளியாகியுள்ளன. உதாரணமாக, பாஜக தரப்பில் மேற்கு வங்கத்தில் ரூ.1,500 கோடி வரவு வந்த நிலையில், பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களுக்காக ரூ.286 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் ரூ.83 கோடியும், அசாமில் ரூ.96 கோடியும், புதுச்சேரியில் ரூ.14 கோடியும் பாஜக செலவிட்டுள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள இந்த விரிவான வரவு செலவுத் தரவுகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Follow Us