நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் டெல்லி விரைவு.. பாஜகவில் முக்கிய மாற்றங்கள்?
Nainar Nagendran Delhi visit: பாஜக மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்றுத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் டெல்லி விரைந்துள்ளனர். டெல்லியில் தேசியத் தலைவர் நிதின் நவீனைச் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், தமிழக பாஜகவில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சென்னை, ஆகஸ்ட் 21: தமிழ்நாடு அரசியலில் பாஜக உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அமைப்பில் மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்றுத் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தேசிய அளவில் பாஜகவின் முக்கியப் பொறுப்புகளில் சமீபத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலும் கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும், வரவிருக்கும் அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவும் இந்த அவசரப் பயணம் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!
டெல்லி புறப்பட்ட நயினார் நாகேந்திரன்:
சென்னையிலிருந்து காலை 8 மணி அளவில் புறப்பட்ட நயினார் நாகேந்திரன், டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் உள்ளிட்ட தேசிய அளவிலான மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் பாஜகவின் அமைப்பை வலுப்படுத்துவது, கட்சியில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது, மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த தலைவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாலையில் டெல்லி செல்லும் வானதி:
நயினார் நாகேந்திரனைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் தேசிய மகளிர் அணித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசனும் டெல்லி மேலிட அழைப்பின் பேரில் மாலை டெல்லி செல்லவுள்ளாார். தேசிய மகளிர் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவருக்கு தேசிய அளவில் அல்லது மாநில அளவில் வழங்கப்பட வேண்டிய புதிய பொறுப்புகள் குறித்த முடிவுகள் இச்சந்திப்பில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நிகழப்போகும் நிர்வாக மாற்றம்:
சமீபத்தில் தேசிய அளவில் பாஜக நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், தமிழக பாஜகவில் சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்த சலசலப்புகள் நிலவி வந்தன. இந்நிலையில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இரு முக்கிய தலைவர்களும் அடுத்தடுத்து டெல்லி விரைந்துள்ளது, தமிழக பாஜகவில் விரைவில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையே காட்டுகிறது.
இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயர் கைவிட்டது சரிதான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மாநில அளவில் புதிய நிர்வாகிகள்?
இந்த திடீர் ஆலோசனைகளின் மூலம் தமிழக பாஜகவில் உட்கட்சி ரீதியாகப் பல்வேறு புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில அளவிலான அணிகளுக்குப் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது. டெல்லி மேலிடத்தைச் சந்தித்துத் திரும்பிய பின்னர், தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகக் கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.