இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்.. தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்!!
Tamilnadu Weather Today: தொடர்ந்து, நாளை (நவ.17) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை, நவ.16: தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 840 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதுதொடர்ந்து, இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். நாளை அதி தீவிர புயலாகவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ‘அக்வான்’ என்று பெயரிடப்பட உள்ளது.
இதையும் படிக்க : மாணவர்களைச் சந்திக்கும் முதல்வர் விஜய் – தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (நவ.16) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் நாட்களில் மழை வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (நவ.17) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு:
அதனைத்தொடர்ந்து, நவ.18ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும். அதோடு, நவ.19ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வட தமிழக கடலோரப் பகுதிகளில் 21-ம் தேதி வரையும், அந்தமான், நிகோபார் தீவுப் பகுதிகளில் 17-ம் தேதி வரையும், தென் மேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதியில் 18-ம் தேதி வரையும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உட்பட இருவர் சிறையில் அடைப்பு.. 6 கிலோ தங்கம் மீட்பு!!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.