கரையைக் கடக்கும் அக்வான் புயல்.. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை? – வானிலை மையம் அப்டேட்!
Cyclone Akvan Alert : வங்க கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் நவம்பர் 20,2026 நாளை நண்பகல், வட மேற்கு திசையில் நகர்ந்து நர்சாபூர் மற்றும் பூரிக்கு இடையே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 19 : தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 18, 2026 நேற்று நிலவிய அக்வான் (Cyclone Akvan) தீவிர புயல் வடக்கு திசையில் நகர்ந்து நவம்பர் 19, 2026 இன்று காலை 8. 30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது நவம்பர் 20,2026 நாளை நண்பகல், வட மேற்கு திசையில் நகர்ந்து நர்சாபூர் மற்றும் பூரிக்கு இடையே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கரையைக் கடக்கும் அக்வான் புயல்
இந்த நிலையில் நவம்பர் 19, 2026 இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!




எங்கெல்லாம் மழை பெய்யும்?
அதனைத் தொடர்ந்து நவம்பர் 20, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் 23.11.2026 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் நவம்பர் 23, 2026 திங்கள்கிழமை கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : “திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினாரா?”.. திமுக நிர்வாகி மீது தவெக பரபரப்பு குற்றச்சாட்டு!
மேலும் நவம்பர் 24, 2026 செவ்வாய் கிழமை கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.