சென்னையில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Affordable Housing Scheme : சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளிலும் குடிசை பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடுகளைப் பெறுவதற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 19 : சென்னையில் சொந்த வீடு (House) இல்லாமல் வாடகை வீடுகளிலும் குடிசை பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 9 இடங்களில் 6,157 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளைப் பெறுவதற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் 6,157 புதிய குடியிருப்புகள்
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் 9 இடங்களில் ரூ.1,401.75 கோடி மதிப்பில் 6,157 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ள பகுதிகளில் ஏற்கெனவே வசித்து வரும் மக்களைத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க : கோவையில் ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட நாரைகள் மர்ம மரணம்! பறவைக் காய்ச்சல் அச்சத்தில் பொதுமக்கள்




புதிய வீடுகளில் என்னென்ன வசதிகள் இருக்கும்?
புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 420 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளன. ஒரு படுக்கையறை, வரவேற்பறை மற்றும் சமையலறை கொண்ட 1பிஎச்கே வீடுகளாக இவை வடிவமைக்கப்படுகின்றன. லிப்ட் வசதியுள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.750 பராமரிப்புக் கட்டணமும், லிப்ட் இல்லாத குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.250 பராமரிப்புக் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் அவர்களுக்குத் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டப்படும் நிலையில், ஏற்கெனவே அங்கு வசித்த தகுதியான குடும்பங்களுக்கு ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். வ்வாறு மீண்டும் வீடு பெறும் பயனாளிகள் ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும் என வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டால், அவர்கள் செலுத்த வேண்டிய தொகை மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாளை திருச்சியில் ரூ. 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- விண்ணப்பதாரர் சென்னையில் குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை வசித்திருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர் அரசு ஊழியராக இருக்கக் கூடாது.
- வருமானவரி தாக்கல் செய்பவராகவோ, ஜிஎஸ்டி பதிவு வைத்திருப்பவராகவோ இருக்கக் கூடாது.
- விண்ணப்பதாரர் பெயரில் சொத்துகள் இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
- முகவரிக்கான சான்று
- கணவன், மனைவி ஆகியோரின் தனித்தனியான பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,
- குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியல்
- குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை நகல்கள்
- வங்கிக் கணக்குப் புத்தக நகல் மற்றும் வருமானச் சான்றிதழ்
விண்ணப்பிப்பது எப்படி?
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு கோரும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை, முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் சமர்ப்பிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.