AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாளை திருச்சியில் ரூ. 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

CM Vijay Visit To Trichy: நாளை காலை 9 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர் விஜய், காலை 10 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நாளை திருச்சியில் ரூ. 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..
கோப்பு புகைப்படம்
Deepan
Deepan | Published: 19 Nov 2026 13:30 PM IST

நவம்பர் 19, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நாளை திருச்சி வருகை தர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர் செல்லும் வழித்தடங்களில் சாலையின் இருபுறமும் பேரிகார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாளை காலை 10 மணிக்கு திருச்சி வருகை

நாளை காலை 9 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர் விஜய், காலை 10 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையத்திலிருந்து புத்தூர் வரை ரோடு ஷோ செல்லும் முதலமைச்சர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் 600 படுக்கை வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விரிவான மருத்துவ சிகிச்சைக் கட்டடத்தைத் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து, காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளில் தேர்வு செய்யப்பட்ட 100 பேருக்கு தனது கைகளால் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், பின்னர் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

மேலும் படிக்க: “ராமேஸ்வரம் அருகே வீட்டிலேயே நடந்த பிரசவம்!”.. குழந்தை உயிரிழப்பு; தந்தை மற்றும் தாத்தா கைது!!

சாலையின் இருபுறமும் பேரிகார்டுகள் அமைக்கும் பணி தீவிரம்

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் புத்தூர் அரசு மருத்துவமனை வரையிலான சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. சாலையின் மையத் தடுப்புகளுக்கு வர்ணம் பூசுதல், அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள பள்ளங்களைச் சீரமைத்தல், மருத்துவமனை வளாகக் கட்டடங்களில் பெயர்ந்துள்ள சிமெண்ட் பூச்சுகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன.

மேலும், மருத்துவமனை வளாகத்திற்குள் செல்லும் பாதையில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. முதலமைச்சர் ரோடு ஷோ செல்லும்போது பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று வரவேற்பு அளிக்கும் வகையில் பேரிகார்டுகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு; ட்ரோன்கள் பறக்கத் தடை

முதலமைச்சர் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதற்கிடையே, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில், விமான நிலையம், அரசு மருத்துவமனை, ஹோட்டல் தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.. ஆஜராக கால அவகாசம் கேட்ட விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா!!

மேலும், முதலமைச்சரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை ஒருநாள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தடை விதித்துள்ளார். தடையை மீறி ட்ரோன்களைப் பறக்கவிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us