கோடை விடுமுறையில் சொந்த ஊர் செல்லனுமா.. குழுவாக சுற்றுலா செல்லனுமா.. அரசு போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பு!
Special Buses: தமிழகத்தில் நெருங்கி வரும் கோடை காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோடை கால சிறப்பு பேருந்துகள் மற்றும் சுற்றுலா சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பதால், வெளியூர்களில் தங்கி இருக்கும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இவ்வாறு செல்லும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோடை கால சிறப்பு பேருந்துகள் மற்றும் தென்னக ரயில்வே சார்பில் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, தற்போது நெருங்கி வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 -க்கும் அதிகமான சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆர்வம்
இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தற்போது கோடை விடுமுறைக்கு 60 நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால், ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் இயக்கப்படும் ஊர்கள், வழித்தடம், புறப்படும் நேரம் ஆகியவை குறித்த முழு விவரம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொளுத்தும் கோடை வெயில்.. இடையே ஜில்லுன்னு மழை.. இன்றைய வானிலை நிலவரம்..




சுற்றுலா செல்வதற்கும் சிறப்பு பேருந்துகள்
இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்கு www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டி. என். எஸ். டி. சி. செல்போன் ஆப் மூலமாக தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல, குழுவாக சுற்றுலா செல்வதற்கும் அரசு பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும். இதற்கும் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட பேருந்துகளின் டெப்போக்களின் மேலாளர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான அரசு பேருந்துகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி, அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறப்பு பேருந்துகளை திட்டமிட்டு பயன்படுத்தலாம்
தற்போது, வார விடுமுறை நாட்கள், அரசு பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, நெருங்கி வரும் கோடை கால விடுமுறையில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா செல்வதற்கும் பேருந்துகளையும் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த அதிமுக.. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!!