“குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல தமிழ்நாடு சீரழிந்துவிட்டது” – தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த திமுக நிர்வாகி பரந்தாமன்!
DMK Paranthaman Slams TVK Rule: பெண் அதிகாரிகள் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆண்மை குறித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட பரந்தாமன், முதல்வர் விஜய்க்கு ஆளுமை இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார். டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக இதனைச் சும்மா விடாது என்றும் எச்சரித்தார்.
நவம்பர் 10, 2026: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தவெக அரசின் ஆறு மாத கால ஆட்சியை விமர்சித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று ஒரே நாளில் 17 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், பட்டாசு சத்தத்தைவிட பட்டாக்கத்தியின் சத்தமே அதிகமாகக் கேட்டதாகவும் விமர்சித்தார். பண்டிகை நாளில் நடைபெற்ற கொலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து காட்டாட்சி நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் விஜய் தீபாவளி நாளில் ஓய்வு நிலைக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், பண்டிகை முடிந்த பிறகுதான் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தியதாக விமர்சித்தார். முதல்வர் 24 மணி நேரமும் மக்களுக்காகச் செயல்பட வேண்டியவர் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்க்கு கேள்வி
மேலும், போதைப்பொருள் பயன்பாடு குறித்து முதல்வர் விஜய் முன்பு பேசிய கருத்துகளைச் சுட்டிக்காட்டிய பரந்தாமன், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவதன் விளைவாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். துணை சபாநாயகர் பொதுமக்களைத் தாக்குவது, பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொல்லை கொடுப்பதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்ட சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். கள்ளக்குறிச்சி மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: நவ.13ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை அப்டேட் இதோ..
பெண் அதிகாரிகள் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆண்மை குறித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட பரந்தாமன், முதல்வர் விஜய்க்கு ஆளுமை இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார். டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக இதனைச் சும்மா விடாது என்றும் எச்சரித்தார். மேலும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் பதிவிடப்படுவதாகவும், இதனை சைபர் கிரைம் போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல தமிழ்நாடு சீரழிந்துவிட்டது
இறுதியாக, “முதல்வர் விஜய்யின் கையில் தமிழ்நாடு என்ற அழகான பூமாலையைக் கொடுத்துள்ளோம். ஆனால், குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல இந்த ஆட்சி தமிழ்நாட்டைச் சீரழித்துவிட்டது. மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு இது உண்மையிலேயே மாற்றமா?” என ஐ. பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.