திருமண பந்தம் முடியலாம்… அன்பான பெற்றோர் முறை முடிவதில்லை!
Co Parenting Guidelines: பெற்றோர்கள் பிரிந்த பின்னரும் தொடர்ச்சியான அன்பை வழங்கி, ஒருவரைப் பற்றி மற்றொருவர் தவறாகப் பேசுவதைத் தவிர்த்து, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற முக்கிய முடிவுகளை இணைந்து எடுப்பதன் மூலம் தங்களது குழந்தைகளின் மனநலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெற்றோருக்கு இடையிலான மோதல்கள் குறைவது குழந்தைகளின் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தைக் குறைப்பதோடு, அவர்களின் சுயமரியாதையையும் கல்வித் திறனையும் உயர்த்துகிறது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வாழ்க்கைப் பாதையில் கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தம்பதிகள் பிரிவது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இருப்பினும், பெற்றோர் தனித்தனியாக வாழத் தொடங்கும் சூழலில், (Co Parenting Guidelines) அவர்களின் முடிவால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. அவர்களின் அன்றாட வாழ்வியல் சூழலிலும் மனநிலையிலும் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்களை எதிர்கொள்ள அவர்களுக்குப் போதுமான கால அவகாசமும், வலுவான உளவியல் ஆதரவும் தேவைப்படுகிறது. பிரிந்த பின்னரும் பெற்றோர்கள் இருவரும் தங்களின் மோதல்களைப் புறந்தள்ளி, குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டியது இன்றியமையாத கடமையாகும்.
Also Read: ரீல்ஸ் மோகத்திலிருந்து விடுபட வேண்டுமா? புதிய வைரல் டிரெண்ட்!
குழந்தைகளின் மனநலனைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்
பெற்றோரின் பிரிவால் குழந்தைகள் மன ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருக்க சில அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்:
தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவு: பிரிவுக்குப் பிறகும் பெற்றோர் இருவருமே குழந்தைகளிடம் சமமான அன்பையும் அரவணைப்பையும் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
எதிர்மறைப் பேச்சுகளைத் தவிர்த்தல்: குழந்தைகளிடம் மற்றொரு பெற்றோரைக் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது தவறாகப் பேசுவதோ கூடாது.
கூட்டு முடிவுகள்: கல்வி, ஆரோக்கியம் மற்றும் பள்ளி சார்ந்த முக்கியமான முடிவுகளை இருவரும் கலந்தாலோசித்து ஒன்றாக எடுக்க வேண்டும்.
பொறுப்பைச் சுமத்தாதிருத்தல்: பெற்றோரிடையே உள்ள தனிப்பட்ட சிக்கல்களுக்குக் குழந்தைகளைக் காரணமாக்குவதையோ, அவர்களைப் பொறுப்பாக்குவதையோ முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பான சூழல்: குழந்தைகள் எவ்வித பயமுமின்றி, மன அமைதியுடன் வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது பெற்றோர் இருவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
பெற்றோர் கூட்டுறவு குறித்து உளவியல் ஆய்வுகள் கூறும் தகவல்கள்
விவாகரத்து அல்லது பெற்றோர் பிரிவுக்குப் பிறகு குழந்தைகளின் மன ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்துப் பல்வேறு உலகளாவிய உளவியல் ஆய்வுகள் மேற்கோள்காட்டுகின்றன. Journal of Pediatrics இதழில் வெளியான ‘Coparenting after marital dissolution and children’s mental health’ என்ற விரிவான ஆய்வு, 2000 முதல் 2014 வரையிலான குடும்பத் தரவுகளை ஆராய்ந்தது.
இதில், பிரிந்த பிறகும் பெற்றோரிடையே தொடரும் சண்டைகளும் மோதல்களும் குழந்தைகளுக்குக் கடுமையான மனச்சோர்வு, பதற்றம் மற்றும் நடத்தைப் பிரச்சினைகளை உருவாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில், பெற்றோர் தங்களுக்குள் இணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் செயல்படும்போது, அது குழந்தைகளின் கல்வித் திறன் மற்றும் சுயமரியாதையை கணிசமாக உயர்த்துகிறது என்பதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
Also Read: ரீல்ஸ் மோகத்திலிருந்து விடுபட வேண்டுமா? புதிய வைரல் டிரெண்ட்!
தம்பதியர் உறவில் சிக்கல்கள் எழும்போது செய்ய வேண்டியவை
திருமண உறவில் விரிசல் ஏற்பாடுகள் தோன்றும்போதே அவசரப்பட்டு பிரிவை நோக்கி முடிவெடுக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்:
வெளிப்படையான உரையாடல்: இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்புகளை நேருக்கு நேர் பேசித் தீர்க்க முயல வேண்டும். மற்றவர் கூறுவதைக் கூர்ந்து கவனிப்பதே பாதி சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
வல்லுநர்களின் ஆலோசனைகள்: மன அழுத்தம் மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தாங்களாகவே கையாள முடியாதபோது, குடும்ப நல உளவியல் நிபுணர்களின் வழிகாட்டதலைப் பெறுவது ஆரோக்கியமான முடிவாகும்.
உறவின் முடிவு வாழ்க்கையின் முடிவல்ல: பரஸ்பர மரியாதையின் அவசியம்
திருமணம் என்பது இரு குடும்பங்களை இணைக்கும் பாலமாக இருந்தாலும், சில நேரங்களில் இருவரின் நல்வாழ்வுக்காகத் தனித்தனியே பயணிப்பதே சரியான தேர்வாக மாறக்கூடும். அப்படிப்பட்ட சூழலில், பிரிவைப் பகையாக மாற்றாமல் நாகரிகமாக எதிர்கொள்வதும், குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதும் மிகவும் முக்கியம். ஒரு திருமண உறவு முடிவுக்கு வந்தாலும், அதில் இருந்த பரஸ்பர மரியாதையும் மனிதநேயமும் என்றுமே முடிவுக்கு வர வேண்டியதில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.