ரீல்ஸ் மோகத்திலிருந்து விடுபட வேண்டுமா? புதிய வைரல் டிரெண்ட்!
Reduce Reels Addiction: தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும் பழக்கத்தைக் குறைக்க 'பிரைன் ஸ்டாக்கிங்' என்ற புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. புத்தகங்கள் படிப்பது, சுடோகு விளையாடுவது, குறுக்கெழுத்துப் புதிர்கள் விடுவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மொபைல் பயன்பாட்டைக் குறைக்கலாம். இத்தகைய செயல்கள் கவனத்திறன், நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுவதுடன், ஆஃப்லைன் பொழுதுபோக்குகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக (Reels Addict) மாறிவிட்டது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்களைப் பார்ப்பதில் பலரும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே மொபைலைப் பயன்படுத்த நினைத்தாலும், அடுத்தடுத்து தோன்றும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் கடந்து விடுகிறது. இதனால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதுடன், கவனச்சிதறல் மற்றும் நேர விரயமும் ஏற்படுகிறது.
Also Read: தினசரி ஜீன்ஸ் அணியும் ஃபேஷன் பிரியர்களா நீங்கள்? இதை பண்ணுங்க!
கவனத்தை அதிகரிக்கும் பிரைன் ஸ்டாக்கிங் முறை
தொடர்ந்து மொபைல் திரையையே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கத்தைக் குறைக்க தற்போது ‘பிரைன் ஸ்டாக்கிங்’ (Brain Stacking) என்ற புதிய டிரெண்ட் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்த முறையில், மொபைல் பயன்பாட்டிற்குப் பதிலாக மூளைக்கு வேலை கொடுக்கும் ஆஃப்லைன் செயல்பாடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். புத்தகங்கள் படிப்பது, நாட்குறிப்பு எழுதுவது, சுடோகு விளையாடுவது, குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பது போன்றவற்றை ஒரே இடத்தில் தயார் நிலையில் வைத்திருப்பதே இதன் அடிப்படையாகும்.
எந்தெந்த பொருட்களை ஒன்றாக வைக்கலாம்?
பிரைன் ஸ்டாக்கிங் முறையைப் பின்பற்ற விரும்புபவர்கள் தங்களுக்குப் பிடித்த நாவல்கள், பொது அறிவு புத்தகங்கள், சுடோகு புத்தகங்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள் மற்றும் ஓவியம் வரைவதற்கான பொருட்களைத் தேர்வு செய்யலாம். இவற்றை வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் இடங்களில் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மொபைலில் ரீல்ஸ் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போது, உடனடியாக போனை எடுக்காமல் இந்தச் செயல்களில் ஏதாவது ஒன்றில் ஈடுபடலாம். இதற்கென குறிப்பிட்ட நேர வரம்பு எதுவும் இல்லை என்பதால், அவரவர் வசதிக்கு ஏற்ப இதனைப் பின்பற்றலாம்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுமா?
இதுபோன்ற புதிர்கள் மற்றும் வாசிப்புப் பழக்கங்கள் மூளைக்கு தொடர்ந்து சிந்திக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. குறிப்பாக, சுடோகு விளையாடுவது நினைவாற்றல், பகுத்தறியும் திறன் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவக்கூடும். மேலும், புதிர்களுக்குத் தீர்வு காணும்போது முடிவெடுக்கும் திறனுக்கும் பயிற்சி கிடைக்கிறது. ஒரு செயலை முழுமையாக முடிக்கும்போது மகிழ்ச்சியும் சாதித்த உணர்வும் ஏற்படுகின்றன. இதனால் பொழுதுபோக்குடன் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
Also Read: தினசரி ஜீன்ஸ் அணியும் ஃபேஷன் பிரியர்களா நீங்கள்? இதை பண்ணுங்க!
பழைய பொழுதுபோக்குகளை மீண்டும் தொடங்கலாம்
எந்நேரமும் இணையத்தில் மூழ்கியிருக்கும் வாழ்க்கை முறையிலிருந்து சிறிது நேரமாவது விலகி இருப்பதற்கான முயற்சியாகவும் இந்த டிரெண்ட் பார்க்கப்படுகிறது. முன்பு புத்தகங்கள் படிப்பது, ஓவியம் வரைவது, புதிர்கள் விளையாடுவது போன்றவற்றில் ஆர்வம் காட்டியவர்கள், காலப்போக்கில் அவற்றைக் கைவிட்டிருக்கலாம். பிரைன் ஸ்டாக்கிங் மூலம் அந்தப் பழக்கங்களை மீண்டும் தொடங்க முடியும். இருப்பினும், இந்த முறை மட்டுமே மொபைல் அடிமைத்தனத்தை உடனடியாக நீக்கிவிடும் என்று கூற முடியாது.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.