AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருவண்ணாமலை கோயிலில் நந்தி வாகனம் மீது ஏறி கோபுரம் சுத்தம் செய்த விவகாரம்.. ஊழியர் மீது பாய்ந்த நடவடிக்கை..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நந்தி வாகனத்தின் மீது ஏறி நின்று தீயணைப்புத் துறையினர் கோபுரங்களைச் சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அசோக் என்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் தீயணைப்பு துறையும் மன்னிப்பு கோரி கடிதம் சமர்பித்துள்ளனர்.

திருவண்ணாமலை கோயிலில் நந்தி வாகனம் மீது ஏறி கோபுரம் சுத்தம் செய்த விவகாரம்.. ஊழியர் மீது பாய்ந்த நடவடிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2026 16:37 PM IST

நவம்பர் 5, 2026: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நந்தி வாகனத்தின் மீது ஏறி நின்று தீயணைப்புத் துறையினர் கோபுரங்களைச் சுத்தம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சம்பவத்திற்குக் காரணமான கோயில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புத் துறையினரும் இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீவிர ஏற்பாடுகள்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா, வரும் நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நாளான நவம்பர் 24ஆம் தேதி அதிகாலை கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். இதனைத் தொடர்ந்து மாலையில் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மேலும் படிக்க: யாருய்யா நீ எங்கய்யா இருக்க.. இந்த காலத்தில் இப்படியொரு மருமகனா.. சென்னையில் ரூ.1.5 கோடியில் மாமனாருக்கு கோயில் கட்டி வழிபாடு!

இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயிலின் ஒன்பது கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும், பஞ்சமூர்த்திகள் வீதி உலா செல்லும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணிகளும், கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நந்தி வாகனம் மீது ஏறி சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்!

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தலைமையில், திருவண்ணாமலை தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி மேற்பார்வையில் கோயில் கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, சுவாமி வீதி உலாவுக்குப் பயன்படுத்தப்படும் நந்தி வாகனத்தின் மீது ஏறி நின்று தீயணைப்பு வீரர்கள் கோபுரங்களைச் சுத்தம் செய்தனர்.

மேலும் படிக்க: 54 சவரன், ரூ.15.46 லட்சம் அபேஸ் செய்த வீட்டு பணிப்பெண்.. மைலாப்பூரில் ஷாக் சம்பவம்..

இந்தக் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் நந்தி வாகனத்தின் மீது ஏறி நின்று பணிகளை மேற்கொண்டது பக்தர்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஊழியர் மீது பாய்ந்த நடவடிக்கை..

கோபுரங்களைச் சுத்தம் செய்வதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றாலும், அதற்காக பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய வாகனத்தைப் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கோயில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கோயிலில் பணியாற்றும் ஊழியர் அசோக் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினரும் வருத்தம் தெரிவித்து, கோயில் நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரி கடிதம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us