யாருய்யா நீ எங்கய்யா இருக்க.. இந்த காலத்தில் இப்படியொரு மருமகனா.. சென்னையில் ரூ.1.5 கோடியில் மாமனாருக்கு கோயில் கட்டி வழிபாடு!
Temple For Father In Law In Chennai : சென்னையில் மறைந்த மாமனாருக்கு அவரது மருமகன் ரூ. 1.5 கோடியில் கோவில் கட்டிய நிலையில், அதில், மாமனார் உருவ சிலை வைத்து அபிஷேகம் செய்து குடமுழுக்க செய்து வழிபாடு மேற்கொண்டார்.
சென்னை மாவட்டம், போரூர் அருகே உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வந்தவர் பெரியநாயகம். இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இதில், மகள் அனிதாவின் கணவர் சாரதி பெரியநாயகம். இவர் தனது மாமனார் பெரியநாயகம் மீது அளவுக்கு அதிகமான அன்பும் பாசமும் கொண்டிருந்தார். இதனால், மாமனார் பெரிய நாயகத்தை குடும்ப உறுப்பினராக மட்டும் பார்க்காமல் தனது குலதெய்வமாகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும் பார்த்து வந்தார். இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2021- ஆம் ஆண்டு பெரியநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவை தாங்க முடியாத மருமகன் சாரதி பெரியநாயகம் அவரது நினைவை என்றும் நிலைநிறுத்தும் வகையில், குடும்பத்தினர் மற்றும் அடுத்த தலைமுறையினர் அவரை வணங்கும் வகையில் மாமனாருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.
ரூ. 1.5 கோடியில் மாமனாருக்கு கோவில் கட்டிய மருமகன்
அதன்படி ஐயப்பன் தாங்கல் பகுதியில் சுமார் ரூ. 1.5 கோடி செலவில் பிரம்மாண்டமான கோயில் கட்டுமான பணிகளை தொடங்கினார். இந்த கோவிலானது வெள்ளை நிறத்தில் பளிங்கு கற்கள் மற்றும் அழகிய தூண்களுடன் பாரம்பரிய கோவில் வடிவில் கட்டப்பட்டது. இதற்கான பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், மாமனாரின் 62- ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று வியாழக்கிழமை ஆகம விதிகளின்படி கோவிலில் குடமுழுக்கு விழா மிக வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக யாக சாலைகள் அமைக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேலும் படிக்க: ஹேக் செய்யப்பட்ட புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கு? ரூ.8 கோடி மாயம்? பரபரப்பு தகவல்




மாமனார் உருவ சிலைக்கு அபிஷேகம்
தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், கோவில் கருவறையில் மாமனார் பெரியநாயகத்தின் உருவ சிலை நிறுவப்பட்டு அதற்கு பால், தயிர், சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அத்துடன் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு பல்வேறு மலர்களால் ஆன மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, மருமகன் சாரதி பெரியநாயகம் உட்பட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கைகூப்பி பெரியநாயகம் சிலையை வழிபாடு செய்தனர்.
திண்டுக்கலில் இருந்து 6 அடி உயர ஐம்பொன் சிலை
மாமனார் மீது உள்ள அளப்பரிய பாசத்தால் கோவிலை மட்டும் கட்டிவிடாமல், அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் மருமகன் சாரதி பெரியநாயகம் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுதோறும் பெரிய நாயகத்தின் பிறந்தநாள், நினைவு நாள்களில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை வழங்கி வருகிறார். கோவிலில் நிறுவப்பட்டுள்ள பெரிய நாயகத்தின் ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் இருந்து சுமார் ரூ.2 லட்சம் செலவில் 6 அடி உயரத்துக்கு தத்ரூபமாக செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 450 டன் வெங்காயம் வீண்! விலையேற்றதால் மக்கள் கண்ணீர்.. கவலையின்றி இடைத்தேர்தல் பணியில் 24-ஆம் புலிகேசி.. உதயநிதி காட்டம்!