70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Free Medical Treatment for Senior Citizens : தமிழகத்தில் 70 வயது நிரம்பிய 38 லட்சம் முதியவர்களுக்கு வருமான உச்ச வரம்பின்றி அரசு காப்பீட்டின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இடம்பெறாத முதியவர்களும், இத்திட்டத்தில் இணைக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 25 : தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மானிய கோரிக்கையின் போது முதியவர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோர் காப்பீட்டு திட்டம் (Insurance Scheme) செயல்படுத்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார். மேலும், புற்றுநோய் சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று சிகிச்சைகள், உயர்தர பரிசோதனைகள் உள்பட காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்திருந்தார்.
70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை
இந்த நிலையில் தமிழகத்தில் 70 வயது நிரம்பிய 38 லட்சம் முதியவர்களுக்கு வருமான உச்ச வரம்பின்றி அரசு காப்பீட்டின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அத்திட்டத்தில் இடம்பெறாத முதியவர்களும், இத்திட்டத்தில் இணைக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா முடிவு? விரைவில் கைதாகிறார்!




மேலும், பயனாளிகள் சேர்க்கை, இ-சேவை மையங்கள் மூலமாகவும், அரசு காப்பீடு பதிவு செய்வதற்கான பிற மையங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும். புதிதாக இணையும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.849 என்ற வீதத்தில் காப்பீட்டு தவணை தொகை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும். மேலும் வருகிற 2027 ஆம் ஆண்டு புதிய காப்பீட்டு நிறுவனத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் போது பிரீமியம் தொகையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது முதல்வர் காப்பீட்டில் உள்ள அனைத்து மருத்துவ சேவைகளும் முதியோர் காப்பீட்டு திட்டத்திலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, நிதித்துறையின் ஒப்புதலுடன் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. பயனாளிகளை சேர்ப்பதற்கு முன்பு அவர்களது சுய விவரங்கள் முறையாக சரிபார்க்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் காப்பீடு, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களில் உள்ள பயனாளிக்கு இரட்டை பலன் கிடைக்காதவாறு இதனை செயல்படுத்துவது முக்கியம். இந்த விஷயங்களை திட்ட இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : போலி நூல்கள் உருவாக்க 5 பேர்.. சாட் ஜிபிடி-யில் சந்தாதாரான மோகன்.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
முன்னதாக பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் உடல்நல விவரங்களை ஒரே இடத்தில் பராமரித்துத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக ‘நலம் 2.0’ திட்டத்திற்குத் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவு டெண்டர் கோரியுள்ளது. ஒரு குழந்தை பிறந்தது முதல் 18 வயது அடையும் வரை மேற்கொள்ளப்படும் பிறந்த குழந்தை பரிசோதனை, அங்கன்வாடிப் பருவம், பள்ளிப் பருவம் மற்றும் இளம்பருவம் வரையிலான அனைத்துப் பரிசோதனை விவரங்களும் இந்த ஒரே கோப்பில் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.