போலி நூல்கள் உருவாக்க 5 பேர்.. சாட் ஜிபிடி-யில் சந்தாதாரான மோகன்.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
Agalvilakku Publication Owner Mohan : போலி நூல்கள் கொள்முதல் முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சாட் ஜிபிடி சந்தாதாரராக இருந்தது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நூலகங்களுக்கான புத்தக கொள்முதலில் நிகழ்ந்த முறைகேட்டில் கைதான அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சாட் ஜிபிடி- யில் சந்தாதாரராக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பெரியார் அறிவுலகத்துக்கு வாங்கப்பட்ட புத்தகங்களில் பீனிக்ஸ் மற்றும் அகல்விளக்கு பதிப்பக நூல்கள் தரமற்று இருப்பதாகவும், ஆசிரியர் மூலம் நூல்கள் எழுதப்படாமல், செயற்கை நுண்ணறிவு மூலமாக எழுதப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் மோகன் மற்றும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் ஆகியவற்றை சேர்ந்த ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சாட் ஜிபிடி சந்தாதாரராக இருந்த அகல்விளக்கு மோகன்
இதில், அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையில் அனைத்து புத்தகங்களும் செயற்கை நுண்ணறிவு தளங்களில் ஒன்றான சாட் ஜிபிடி மூலமாக உருவாக்கப்பட்டிருப்பது, சில புத்தகங்களின் தொடக்க பக்கங்கள், கடைசி பக்கங்கள் புத்தகங்களின் இருந்து நகல் எடுத்து விட்டு மீதிப் பக்கங்கள் சாட் ஜிபிடி யில் உருவாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக, மோகன் சாட் ஜிபிடி தளத்தின் உயர் சந்தாதாரராக இருப்பதும் தெரியவந்தது. இதற்காக அவர் சாட் ஜிபிடி தளத்துக்கு ஆண்டு தோறும் சந்தா கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.. மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்..
5 பேரை வேலைக்கு வைத்து போலி புத்தகங்கள் உருவாக்கம்
அதே வேளையில், நேரடியாக சாட் ஜிபிடி. பயன்படுத்தவில்லை என்பதும், தஞ்சாவூர் குடவாசலில் உள்ள தனது பதிப்பக அலுவலகத்தில் 5 பேரை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலமாக சாட் ஜிபிடி மூலமாக புத்தகங்களை உருவாக்கி நூலகங்களில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன், சாட் ஜிபிடி சந்தாதாரர் உரிமத்தை பயன்படுத்தி ஒரே நாளில் 5 பேரும் பல்வேறு புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இதற்காக 5 பேருக்கும் தினசரி ஊதியமாக தலா ரூ.500 வழங்கி வந்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களில் தகவல்
அதே வேளையில், இந்த வழக்கில் பொது நூலக இயக்கத்தின் புத்தகத் தேர்வு குழுவில் இருக்கும் சிலர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அவர்களிடமும் போலீசார் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. முன்னதாக மோகன் வீடு உள்பட 7 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் சாட் ஜிபிடி சந்தாதாரர் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சிலேயே பணியாற்ற விருப்பம்.. பெண் ஆட்சியரின் துணிச்சலான முடிவு.. கவிதா ராமு அளித்த ஆதரவு!