கள்ளக்குறிச்சிலேயே பணியாற்ற விருப்பம்.. பெண் ஆட்சியரின் துணிச்சலான முடிவு.. கவிதா ராமு அளித்த ஆதரவு!
Kallakurichi Collector Issue : கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பிய நிலையிலும் பணியிடமாற்றம் இன்றி அதே மாவட்டத்தில் பணியாற்ற முடிவு செய்த ஆட்சியரின் முடிவு துணிச்சல் நிறைந்தது என ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு தெரிவித்தார்.
தனக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நிலையிலும் பணியிடமாற்றம் இன்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே பணிபுரிய விரும்பிய பெண் ஆட்சியரின் துணிச்சல் முடிவுக்கு மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் தற்போது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சனையை பற்றி பேசுவதில் எந்த தவறும் இல்லை. சோசியல் மீடியாக்களில் பலவிதமான கதைகளும், கருத்துக்களும் பரவத் தொடங்கிய போது, மாவட்ட ஆட்சியருக்கு, அவரது கணவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது. 3 மாதங்களுக்கு முன்பே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், சோசியல் மீடியாக்களில் வெளிவந்த பின்னரே எங்களைப் போன்றவர்களுக்கு தெரியவந்தது.
பணியிடமாற்றம் குறித்து பரிசீலனை செய்யுமாறு தலைமை செயலர் அறிவுறுத்தல்
இது தொடர்பாக எங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக கடந்த 11- ஆம் தேதி பெண் ஆட்சியருடன் நாங்கள் விரிவாக பேசினோம். அப்போது, இந்த விவகாரம் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அதே வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதது போல சமூக வலைதளங்களில் சிலர் சித்தரிப்பதை கண்டு மிகுந்த வேதனை அடைந்தார். பெண் ஆட்சியர் பணியிட மாற்றம் ஏதேனும் கோரி உள்ளாரா என்று நான் கேட்டதற்கு, தலைமைச் செயலாளர் மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு முன்பு அறிவுறுத்தி இருந்தார்.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரம்: விசாரணை அதிகாரிகள் நியமனம்! செல்போனை பறிமுதல் செய்ய போலீசார் திட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே பணியாற்ற ஆட்சியர் துணிச்சல் முடிவு
ஆனால், நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெளிவுபடுத்தி விட்டதாகவும் அந்தப் பெண் ஆட்சியர் தெரிவித்திருந்தார். இவரது இந்த முடிவு மிகவும் துணிச்சலான முடிவாகும். அவரைப் போன்று சக அதிகாரிகளான நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேசாதது ஏன் என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதில், நாங்கள் தலையிட்டு செயல்பட விரும்பினோம். ஆனால், எங்களது சக அதிகாரி சம்மதமும், விருப்பமும் இல்லாமல் செயல்படுவது சரியாக இருக்காது என்று நாங்கள் எண்ணினோம்.
பெண் ஆட்சியருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதரவு
அதன் காரணமாகவே, கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரத்தில் சக ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிடாமல் இருந்து வந்தோம். அத்துடன், ஆட்சியரின் சுயமரியாதைக்கும், விருப்பத்துக்கும் முதலிடம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆட்சியர் இந்த கடினமான அத்தியாயத்தை கடந்து, மன அமைதியையும், வலிமையையும் பெற வேண்டும் என்று அந்த பதிவில் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.