அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு.. புதுச்சேரியில் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் பொது மக்கள்!
2 People Die Of Dengue Fever : புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒரு ஆண், ஒரு கல்லூரி மாணவி என இருவர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது பொது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதற்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் முகமது இர்ஃபான் ( 22 வயது). இவருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட நிலையில் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் காரணமாக, சுமார் 4 நாள்கள் தீவிர காய்ச்சல் அறிகுறியுடன் முகமது இர்பான் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், திடீரென அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததுடன், நிலமை கவலைக்கிடமாக மாறியது. இதனால், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜிப்மரில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டெங்கு பாதிப்பால் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த முகமது இர்பான் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல, புதுச்சேரி மூலகுளம் பகுதியில் உள்ள பிச்சை வீரன் பேட்டை பகுதியில் வசித்து வரும் குமரேசன் மகள் ஹரிணி ( 19 வயது) கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, அருகில் உள்ள மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் மாணவி ஹரிணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், காய்ச்சல் பாதிப்பு குறையாத நிலையில் திடீரென தீவிரமானது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சிலேயே பணியாற்ற விருப்பம்.. பெண் ஆட்சியரின் துணிச்சலான முடிவு.. கவிதா ராமு அளித்த ஆதரவு!
டெங்குவால் உயிரிழப்பு இல்லை என முரணான தகவல்
இதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென மாணவி உயிரிழந்தார். ஆனால், அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை எனவும், டெங்கு காய்ச்சலால் அவர் உயிர் இழக்கவில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அதாவது, அரசு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனை முடிவுகள் சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்ட பின்னரே டெங்கு மரணம் என்று ஒத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகம்
இதன் காரணமாக புதுச்சேரியில் அடுத்தடுத்து 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்துக்குள் இருந்த டெங்கு பாதிப்பு நிகழாண்டு 30 சதவீதம் கூடுதலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா முடிவு? விரைவில் கைதாகிறார்!