நாளை முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானம் – வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?
முதல்வர் விஜய் அரசு மீது மே 13, 2026 காலை 9.30 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது முதல்வர் விஜய் முன்மொழியும் அரசினர் தீர்மானம் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். தற்போது வரை முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு போதுமான ஆதரவு உள்ளது.
சென்னை, மே 12 : முதல்வர் விஜய் அரசு மீது மே 13, 2026 காலை 9.30 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதல்வர் விஜய் முன்மொழியும் அரசினர் தீர்மானம் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். தற்போது வரை முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு தேவையான 118க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால் தவெக அரசு தொடர்வதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.
நாளை முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 108 இடங்களை வென்ற தவெக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு இல்லாததால் அவரது கோரிக்கையை ஆளுநர் மீண்டும் மீண்டும் நிராகரித்தார்.
இதையும் படிக்க : மக்களுக்கு இடையூறு – தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை




இதனையடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்ரவாக பதவியேற்றார். இதற்கிடையில் தவெக வருகிற மே 13, 2026 அன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்தார்.
இந்த நிலையில் மே 13, 2026 நாளை காலை 9.30 மணிக்கு முதல்வர் விஜய் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வர்.
வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?
சட்டமன்றத்தில் சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கோர வாய்ப்பளித்த பிறகு, வாக்கெடுப்பிற்காக அவையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். பின்னர் வாக்கெடுப்பின் போது அவையில் இருக்கும் எம்.எல்.ஏகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவர். இதற்காக அவை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் உதாரணமாக 230 பேரில் 118 பேர் ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாகக் கருதப்படும். வாக்கெடுப்பு முடிந்தவுடன், எண்ணிக் கணிக்கும் முறைப்படி பெறப்பட்ட இறுதி முடிவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
இதையும் படிக்க : இடதுசாரி – வலதுசாரி அரசியல் கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு.. அரசியல் நாகரீகம் என புகழாரம்!
தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என 2 ஆக பிரிந்துள்ளது. இதில் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் சட்டமன்றத்தில் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால் மே 13, 2026 சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.