தற்குறி என சொன்னவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளனர் – திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு..
‘அரசியல் புரிதல் இல்லாமல் கவர்ச்சியில் மயங்கி வாக்களித்து விட்டார்கள்’ என கூறுகிறார்கள். மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள்; நமக்கு ஓட்டு போட்டால் கெட்டவர்கள், தற்குறிகள். அண்ணா ஆரம்பித்த கட்சியை ஒரு அடிமைக் கூடாரமாக மாற்றியது யார்? என முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன் 1, 2026: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். “திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் ஸ்பெஷல் வணக்கம், ஸ்பெஷல் நன்றிகள்” எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார். “தமிழ்நாட்டுக்கு எப்படி திருச்சி ஒரு இதயமோ, அதேபோல் என்னுடைய இதயத்துக்கும் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மிக மிக கிளோஸ் தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
6 மாதம் அமைதியாக இருப்பேன் என சொன்னவர்கள் 6 நாளில் ஆரம்பித்து விட்டார்கள்:
ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. ‘ஆறு மாதம் அமைதியாக இருப்போம்’ என சொன்னவர்கள் எல்லாம் ஆறு நாட்கள் கூட அமைதியாக இல்லை. ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே ஆரம்பித்து விட்டார்கள். பாவம், கல்யாண வீடுகளுக்கெல்லாம் போய் புலம்பிக்கிட்டு இருக்காங்க. நான் சொன்னதெல்லாம் நடக்குதா என ஒன் பை ஒன்னா புலம்புறாங்க.
இத்தனை வருடங்களாக மாத்தி மாத்தி உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்த இரண்டு பேரையும் வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கிய நீங்கள், உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்கள் விஜயை, உங்கள் அண்ணனை, உங்கள் தம்பியை முதலமைச்சராக இல்லை, முதல் சேவகனாக ஆக்கியுள்ளீர்கள். தலைவணங்கி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும், அத்தனை இயக்கத் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் அன்பாக உழைக்க வந்தவன்:
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு வாக்கு சதவீதம் பெறவில்லை என சொல்கிறார்கள். ஆனால், இன்று தமிழக வெற்றிக்கழகத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. நான் என்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடவில்லை. எம்.ஜி.ஆர். எப்போதும் எம்.ஜி.ஆர். தான். ஆனால், நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் அன்பாக உழைக்க வந்த உங்கள் விஜய். அவ்வளவுதான்.
1977-ல் போடாத ஓட்டை, 2026-ல் போட்டுள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாக போட்டிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும். எதிர்காலத்தில் வரப்போகும் எல்லா தேர்தல்களிலும் உங்களுடைய முழு ஆதரவையும் வாங்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கக்கூடிய இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் கண்கூடாக பார்க்கப் போகிறீர்கள். அந்த கான்பிடன்ஸும் என் மனதில் ஆழமாக இருக்கிறது.
கிண்டலும் கேளியும் எப்போதும் இருக்கும்:
Tiruchirappalli | Tamil Nadu CM Vijay says, “Many people are talking about me wearing a coat. Why? Aren’t we allowed to wear a coat and a suit? Should only those in power and the dominant forces be the ones wearing coats and suits? These two colours reflect the two sides of the… pic.twitter.com/fmwu4E5Obi
— ANI (@ANI) June 1, 2026
யார் எந்த நிலைமைக்கும், எந்த பொசிஷனுக்கும் போனாலும் கிண்டலும் கேலியும் பேசுவது இருக்கத்தான் செய்யும். நம்மைப் பற்றி, நம்ம அரசியலைப் பற்றி, நம்ம பேச்சைப் பற்றி கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு ரெக்வெஸ்ட்… தயவு செய்து அதை நிறுத்தாதீங்க. நீங்கள்தான் என்னுடைய எனர்ஜி ஃபோர்ஸ். நீங்க பேசிக்கிட்டே இருங்க, நாங்க செஞ்சிக்கிட்டே இருப்போம்.
புதுசா நாங்க கோட், சூட் எல்லாம் போட்டு வர்றோம்ல, அதைப் பற்றிக்கூட நிறைய பேர் பேசுறாங்க. ஏன், நாங்க எல்லாம் கோட், சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்றவங்களும் ஆதிக்கம் செய்றவங்களும் மட்டும் தான் கோட், சூட் போடணுமா? ரெண்டே கலர் தான் — பிளாக் அண்ட் வைட். எல்லா இடத்திலும் இந்த விஜய் பிளாக் அண்ட் வைட் போல்தான் இருப்பேன்.
எல்லாத்திற்கு விளக்கம் சொல்ல முடியாது:
எல்லாத்துக்கும் இப்படி விளக்கம் சொல்லிட்டு நச நச பேசுற டைப் நான் கிடையாது. எல்லா மீட்டிங்களிலும் 20 நிமிடத்துக்குள்ள தான் நான் பேசியிருக்கேன். அதனால மக்கள் என்ன சொல்றாங்கன்னா, ‘நீ எங்களுக்காக உழைக்க வந்திருக்க. அதை மட்டும் நீ பாரு. உங்களுக்காக நாங்க பேசுறோம்’ அப்படின்னு சொல்றாங்க.
ரெண்டே பேருக்கு தான் போட்டியே:
அரசியல் ரீதியாக இப்பவும் சொல்றேன்… ரெண்டே ரெண்டு பேருக்குள்ள தான் போட்டி. ஒன்று திமுக, இன்னொன்று தமிழக வெற்றிக்கழகம். இதுக்கு நடுவுல வேற யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. தேர்தலுக்கு முன்னாடியும் அவங்களுக்கு வேலையில்லை; இப்போ தேர்தலுக்கு அப்புறமும் சுத்தம்.
ஆனால், இந்த திமுகவும் பலரும் சேர்ந்த ஒரு கூத்து பண்ணாங்களே… அதை பார்த்தப்போ ‘இப்படி எல்லாம் நடக்குமோ?’ என்ற எண்ணம் வந்தது. எதிர்காலத்திலும் உங்களுக்காக உழைக்க வந்த விஜயா, இல்லை அதை எதிர்க்க வந்த ஸ்டாலின் சாரா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நம்மளை ஏளனமாக பேசுவதாக நினைத்து, அவர்கள் அவங்களே ஆப்பு வைத்துக்கிறாங்க. திமுக நம்மை அவமானப்படுத்த நினைப்பதும், ஏளனமாக பேசுவதும் எல்லாமே நமக்கு நன்மைதான்.
எல்லோர் கவனமும் அரசியல் பக்கம் திரும்பியுள்ளது:
ஒன்னு கவனிச்சீங்களா மக்களே… ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாடி சட்டசபையில் யார் என்ன பேசினாலும் ‘நமக்கு என்ன?’ என்ற சூழல் மாறி, இப்போது எல்லோரும் சட்டமன்றத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இளம் தலைமுறையினரும் பெண்களும் அரசியலில் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அது தற்போது நடந்திருக்கிறது. அது சந்தோஷமான விஷயம்.
இப்படிப்பட்ட நம் மக்களை ‘தற்குறிகள்’ என இன்னும் சிலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் தற்குறி என சொன்னவர்கள்தான் இன்று உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறார்கள்.
மக்களை தவறாக பேசினால் இந்த விஜய் கேள்வி கேட்பான்:
‘அரசியல் புரிதல் இல்லாமல் கவர்ச்சியில் மயங்கி வாக்களித்து விட்டார்கள்’ என கூறுகிறார்கள். மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள்; நமக்கு ஓட்டு போட்டால் கெட்டவர்கள், தற்குறிகள். அண்ணா ஆரம்பித்த கட்சியை ஒரு அடிமைக் கூடாரமாக மாற்றியது யார்? உங்களுடைய உண்மையான உடன்பிறப்புகள் சொல்வதெல்லாம், ‘திமுக இப்படி ஆனதற்கு காரணம் உங்கள் குடும்பத்தினரிடம் கேளுங்கள்’ என்பதுதான். ஒவ்வொரு திமுக தொண்டனும் அதை சொல்றாங்க. அதை புரிந்து கொள்ளாமல் மக்களை தவறாக பேசுகிறார்கள்.
மக்களை தவறாக பேசினால் இந்த விஜய் கேள்வி கேட்பான். இந்த விஜய்யும் தமிழ்நாட்டு மக்களும் வேறு வேறு இல்லை. நமக்கும் மக்களுக்கும் இடையே இருக்கக்கூடிய அந்த பந்தத்தை யாராலும் தடுக்க முடியாது.
என்னென்ன சூழ்ச்சிகள், என்னென்ன விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், நம்மளையும் மக்களையும் பிரிக்க நினைத்தால் அது ஒருபோதும் நிறைவேறாது” என தெரிவித்தார்.