25 மாநகராட்சிகளிலும், அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் தடையற்ற குடிநீர் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய்
2031ஆம் ஆண்டிற்குள் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பசுமை உள்கட்டமைப்பு மற்றும் திறந்தவெளி பொது இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி போன்ற நகரங்களில் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 9, 2026: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தினமும் குறைந்தது 3 மணி நேரமாவது குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். கூட்டத்தில் AMRUT, AMRUT 2.0, ஜல் ஜீவன் மிஷன் (JJM), SBM 2.0 உள்ளிட்ட ஒன்றிய அரசுத் திட்டங்கள் மற்றும் பன்னாட்டு நிதிநிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Urban Challenge Fund திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தடையற்ற குடிநீர் வழங்க வேண்டும்:
தமிழகத்தின் 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் தடையற்ற குடிநீர் வழங்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் குடிநீர் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சென்னை மாநகரின் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், கழிவுநீர் கலப்பை தடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீத குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்கும் பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பசுமை உள்கட்டமைப்பு:
2031ஆம் ஆண்டிற்குள் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பசுமை உள்கட்டமைப்பு மற்றும் திறந்தவெளி பொது இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி போன்ற நகரங்களில் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: சென்னை ஆவடியில் ஈ.பி பெட்டியிலிருந்து 17 பியூஸ் கேரியர்களை திருடிய நூதன சம்பவம்.. இரண்டு பேர் கைது..
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 5 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமைப் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்றும், வெள்ளத் தடுப்பிற்காக “ஸ்பாஞ்ச் பூங்காக்கள்” உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், “முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம் 2026-2031” மூலம் குடிநீர், சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற பசுமை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.