அதிமுக கூட்டணியில் இணையுமா தவெக? விஜய்க்கு சிக்னல் கொடுத்த நயினார் நாகேந்திரன்.. என்ன மேட்டர்?
ADMK TVK Alliance : அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

சென்னை, மே 28 : திராவிட முன்னேற்ற கழகத்தை (திமுக) வீழ்த்த தமிழக வெற்றிக் கழக (tvk vijay) உள்பட அனைத்து கட்சிளும் ஒன்றிணைய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (nairnar nagendran) கூறியுள்ளார். அதோடு, கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதிமுக பாஜக கூட்டணியில் இணைய விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதனை விஜய் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் (tamil nadu assembly election) நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பாஜக கூட்டணியில் இணையுமா தவெக?
குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அண்மையில் தான் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது களத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தலைமை முயற்சித்து வருவதாக தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளைஞர்கள், பெண்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால், அக்கட்சி கூட்டணிக்கு வந்தால் வெற்றி எளிதாக இருக்கும் என அதிமுக தலைமை நம்புகிறது. இதனால், விஜய்யை கூட்டணிக்குள் அழைப்பதற்கான காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.




இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “திமுகவை வீழ்த்த ஒத்த கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தோடு தேர்தலை அதிமுக அணுகுகிறிது.
அன்புச் சகோதரர் விஜயும் திமுக ஆட்சியை அகற்றும் நிலைப்பாட்டில் உள்ளார்” என்று கூறினார். இதன் மூலம், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், கடம்பூர் ராஜூவின் கருத்திற்கு நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு சிக்னல் கொடுத்த நயினார் நாகேந்திரன்
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” திமுகவை வீழ்த்த தமிழக வெற்றிக் கழக உள்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய்க்கு அவர் மறைமுக அழைப்பு விடுத்ததாக கருதப்படுகிறது. இவரின் அழைப்பை விஜய் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தையின் விஜய் பல்வேறு விஷயங்களை கேட்டறிகிறார் என்றும் அதில், ஒன்று முதல்வர் வேட்பாளர் என்றும் கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் விஜய்யின் பல்வேறு நிபந்தனை ஏற்கப்பட்டாலும், முதல்வர் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றே அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த விஷயங்களில் இருகட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், முதல்வர் வேட்பாளர் தான் என்ற முடிவில் விஜய் இருந்தால் இந்த கூட்டணி இருக்காது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, விஜய் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.