2026 சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களுக்கு டார்கெட்.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்..
ADMK - BJP Alliance: 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தரப்பில் 40 இடங்கள் கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த முறை 40 தொகுதிகள் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை, தேர்தல் வியூகம், புத் ஏஜெண்டுகளை அமைப்பது, கள நிலவரம் உள்ளிட்ட பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் முக்கியமாக யாருடன் கூட்டணி என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் 11-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக – பாஜக கூட்டணி:
அதிமுகவும் பாஜகவும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்தது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இரு கட்சிகள் கூட்டணி அமைத்தன. இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்தாலும் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது நிலவி வந்தது. இதனை காரணம் காட்டியே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலை இரு கட்சிகளும் தனித்தனியாக சந்தித்தது. ஆனால் மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை.
மேலும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்ததாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தது. அதாவது உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்த பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
பிற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கும் பாஜக:
தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது அதிமுக இடம்பெற்றிருக்கும் நிலையில் தேமுதிகவையும் தமிழக வெற்றி கழகத்தையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்னும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு தமிழக வெற்றி கழகத்தை பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பதாக கருத்துக்கள் எழுந்தன. ஆனால் இதனை த,வெ.க மறுத்துள்ளது.
40 இடங்களுக்கு டார்கெட்:
இப்படியான சூழலில் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தைகள் இரு கட்சிகளும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாஜக தரப்பில் 40 இடங்கள் கேட்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 20 தொகுதிகளை பாஜக பெற்ற நிலையில் தற்போது அதனை இரு மடங்காக அதாவது 40 தொகுதிகளாக உயர்த்தி கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக நாகர்கோயில், தெற்கு கோவை, நெல்லை மற்றும் மொடக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக சட்டமன்றத்தில் நுழைவது அதுவே முதல் முறையாகும்.
கடந்த முறை 4 தொகுதிகளை வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை 40 தொகுதிகள் கேட்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக தரப்பில் குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமிருக்கும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 40 தொகுதிகளில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகிய இரு தரப்பினருக்கும் சில தொகுதிகளை உள் ஒதுக்கீடு போல் தந்துவிட்டு மீதமுள்ள தொகுதிகளை பாஜக போட்டியிடும் என கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடுக்காண பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் முதல் பேசப்படும் என அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது இருக்கும் திமுக அரசை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுக பாஜக கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது