PMK leadership crisis: தலைவர் பதவி நீக்கம்! ஒரு மாதமாக தூக்கமில்லாமல் தவித்தேன்.. புலம்பிய அன்புமணி ராமதாஸ்!
Anbumani Ramadoss: பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அன்புமணி, ஒரு மாதமாக தூக்கமின்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்திய அவர், தந்தையின் லட்சியங்களை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

தருமபுரி, மே 24: தமிழ்நாட்டில் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi) முக்கியமானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பாமக நிறுவனரும், தந்தையுமான ராமதாஸூடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸூக்கு ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. முன்னதாக, பாமக சார்பில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இருவரும் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் (PMK Anbumani Ramadoss) தலைவராக செயல்படமாட்டார் எனவும், செயல் தலைவராகவே செயல்படுவார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இது பாமக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ஒரு மாதமாக தூங்கவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புலம்பிய அன்புமணி ராமதாஸ்:
தருமபுரியில் இன்று அதாவது 2025 மே 24ம் தேதி பாமக கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார் பேசினார். அதில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஊர் ஊராகவும் தெரு தெருவாகவும் சென்று என்னுடன் வாருங்கள், உங்களுக்கு விடுதலை வாங்கி தருகிறேன் என்று சொன்னார். தொடர்ந்து, கல்வியும், இட ஒதுக்கீடு வாங்கி தர முயற்சி செய்தார். இந்த வன்னியர் சமூகம் வாழ வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார். யாரும் எம்.பி., எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பதற்காக கட்சியை தொடங்கவில்லை. வன்னியர்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால், கட்சி தொடங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனியாக கட்சி தொடங்கினார். தனியாக கட்சி தொடங்கியதால்தான், சட்டமன்றத்தில் பேச முடியும் என்று நினைத்தார். சமீபத்தில், நாம் நடத்திய மாநாட்டை பார்த்து ஆளுங்கட்சி மிரண்டுபோய் பொறாமைப்பட்டது. இந்த மாநாட்டிற்கு கூடிய கூட்டம், நான் கூட்டியது நல்லது. இங்கு நான் பெரியவன், நீ பெரியவன் என்பதல்ல. இளைஞர்களுக்கு நாம் தட்டி கொடுத்து வேலை வாங்க வேண்டும். மாநாட்டிற்கு முன்பு, சத்ரியனா இருக்கக்கூடாது, சாணக்கியனாக இருக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினேன். நாம் எப்போது வேகத்துடனும், விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். ஐயா ராமதாஸ் வழியில் அவர் லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும். அவர் வழியில் பயணித்து, அவர் கட்சி தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்போம்.
பாமக தலைவர் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டது குறித்து கடந்த ஒரு மாதமாக எனக்கு தூக்கம் வரவில்லை. நான் என்ன தப்பு செய்தேன், ஏன் மாற்றப்பட்டேன் என என் மனதிற்குள் பலவிதமான கேள்விகள் எழுந்தது. என் லட்சியம், என் கனவு எல்லாமே அவர் என்ன நினைத்தாரோ அதைதான் இதுவரை நிறைவேற்றினேன். இனியும் ஒரு மகனாக என்ன நினைக்கிறாரோ அதைதான் நிறைவேற்றுவேன். இனிவரும் காலம் நமக்கானது. நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றி பெறுவோம். நமது முதல் வெற்றி என்பது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.