மதுரையை நோக்கி காயை நகர்த்தும் விஜய்.. 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கே போட்டி? அடுத்த மூவ் என்ன?
TVK Leader Vijay: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிடுவார் என தகவல் பரவி வருகிறது. மேலும், அப்பகுதியில் தவெக தரப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நடிகர் விஜய் 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராகிய வாக்காளர்களுக்கு நன்றி என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஓராண்டு காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri Kazhagam) கட்சியின் தலைவர் விஜய் களம் காண்பார் என தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு சான்றாக மதுரை மேற்கு தொகுதியில் த.வெ.க வேட்பாளர் நடிகர் விஜய் 1.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராகிய வாக்காளர்களுக்கு நன்றி என தாவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மும்முறமாக தேர்தலை நோக்கி காயை நகர்த்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்க்கட்சியமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒருவருக்கொருவரை சாடி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:
அதேபோல் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் பிற கட்சிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என அனைவரும் தேர்தல் களம் யாருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம் பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் தோல்விகள் சந்தித்தாலும் தனித்து போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார். இப்படி அனைத்து கட்சிகள் தரப்பிலும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் இதுவரை யாருடன் கூட்டணி என உறுதிப்படுத்தவில்லை. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் மும்முறமாக மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்க வேண்டும் என மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரையை நோக்கி காயை நகர்த்தும் விஜய்:
இது ஒரு பக்கம் இருக்க தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் களம் காண்பார் என தகவல் பரவி வருகிறது. இதற்கு சான்றாக மதுரை மேற்கு தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நடிகர் விஜய் 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராகிய வாக்காளர்களுக்கு நன்றி என த.வெ.க தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் மூலம் அவர் மதுரை மேற்கில் போட்டி இடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடக்கம் முதலே விஜய் மதுரையை நோக்கி காயை நகர்த்துவதாக பல்வேறு யூகங்கள் வெளியானது. அவர் கட்சி தொடங்கிய பின்னர் நடத்தப்பட்ட முதல் மாநாடு மதுரையில் நடக்க இருந்தது. ஆனால் அதற்கு போதிய அனுமதி வழங்கப்படாத நிலையில் விக்ரவாண்டியில் நடத்தப்பட்டது. சமீபத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் மதுரைக்கு சென்று இருந்தது இதில் கூடுதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
மதுரைக்கும் தமிழக அரசியலுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிக்கும் மதுரைக்கும் இணை பிரியாத ஒரு தொடர்பு எப்பொழுதுமே இருப்பது யாராலும் மறுக்க முடியாது. மதுரையில் அரசியல் பயணத்தை தொடங்கினால் வெற்றி பெறலாம் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் அவரது அரசியல் மதுரையை மையமாகக் கொண்டே இருந்தது. அதேபோல் நடிகராக இருந்த விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியையும் மதுரையில் தான் தொடங்கினார். அதேபோல் 2018 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியையும் மதுரை மண்ணில் தான் தொடங்கினார். அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் இடம் பெற்றுள்ளார்.
ஆரம்பம் முதலே மதுரையை நோக்கி காயை நகர்த்திய தமிழக வெற்றி கழகம் தற்போது அதற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இந்த போஸ்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களால் ஓட்டப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கோட்டையான மதுரை மேற்கில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தொடர்பாக அமைச்சர் கே என் நேருவுடன் கேள்வி எழுப்பியபோது மிகவும் கிண்டலாக 500 ரூபாய் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் ஒட்டலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.