கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!
Tamilisai Soundararajan : தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இருந்தால், திமுக அரசு கருணையொடு நடந்து கொள்ளவில்லை என்றால் கூட்டணியில் வெளியேறுவோம் என்று கூற முடியும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் முதல்வரை விட தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

சென்னை, ஆகஸ்ட் 12 : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற தவறினால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என விசிக தலைவர் திருமாவளவன் (Thirumavalavan) சொல்ல தயாரா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கமலாலயத்தில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “தூய்மை பணியாளர்கள் மீது திமுக அரசு கருணையோடு நடந்து கொள்ளவில்லை என்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என திருமாவளவன் சொல்ல தயாராக இருக்கிறாரா? கம்யூனிஸ்ட் கட்சிகளும், திருமாவளவனும் வெளியில் வாய் பேசுகிறார்கள். ஆனால், திமுகவிடம் அடங்கிப் போய் இருக்கிறார்கள்.
கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா?
உங்களுக்கு தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மற்றும் திருமாவளவன் கருணையொடு நடந்து கொள்ளவில்லை என்றால், திமுக கூட்டணியில் வெளியேறுவோம் என்று கூற வேண்டும். அப்போது, மக்கள் உங்களை நம்புவார்கள்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் முதல்வரை விட தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார். மத்திய திட்டங்களில் மாநிலம் தனது ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றியது கடைசியாக இருக்கும்.




Also Read : எம்ஜிஆர், ஜெயலிதா குறித்து அவதூறாக பேசினேனா..? திருமாவளவன் விளக்கம்..!
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்திய விதத்தை பார்க்கும்போது சமூக நீதி குறித்து திமுக பேசுவதற்கு தகுதி இல்லை. புதிய இந்தியாவை படைப்பதற்காக பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். தற்போது, ஜிஎஸ்டி என்ற ஒரு அருமையான திட்டத்தை அனைத்து கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர். ஜிஎஸ்டி திட்டம் மக்களுக்கும், சிறு, குறு, வியாபாரிகளுக்கு பலன் தரும்” எனக் கூறினார்.
Also Read : முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்.. பின்னணி என்ன?
இதற்கிடையில், தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்தார். இதுகுறிதது அவர் கூறுகையில், “தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை விசிக சார்பில் வரவேற்கிறோம். அதே நேரம், அவர்களின் கோரிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். தனியார்மயப்படுத்தும் முயற்சியை கைவிட்டு அவர்கள் அனைவரையும் மாநில அளவில் பணிநிரந்தரம் செய்ய முன்வர வேண்டும்” என கூறினார்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை அருகே 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.